சான் பிரான்சிஸ்கோ: செயற்கை நுண்ணிறவு திறன் கொண்ட சாட்பாட் ஆன சாட்ஜிபிடி-யில் புதிய அம்சம் அறிமுகமாகி உள்ளது. பயனர்கள் உடனான உரையாடலை நினைவில் வைத்துக் கொள்ளும் திறன் தான் சாட்ஜிபிடி பெற்றுள்ள புதிய அம்சம்.
கடந்த 2022-ல் உலக மக்கள் மத்தியில் அதி தீவிரமாக பேசப்பட்டது சாட்ஜிபிடி. செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட இந்த சாட்பாட் உடன் பயனர்கள் உரையாட முடியும். பயனர்கள் கேட்கின்ற கேள்விகள் அனைத்துக்கும் டெக்ஸ்ட் வழியில் பதில் கொடுக்கும் வல்லமை கொண்டது சாட்ஜிபிடி. கதை, கட்டுரை, கவிதை, கம்ப்யூட்டர் புரோகிராம் என அனைத்தையும் இதில் பெறலாம். ஓபன் ஏஐ எனும் நிறுவனம் சாட்ஜிபிடி-யை வடிவமைத்தது.
அவ்வப்போது பயனர்களுக்கு பயனுள்ள வகையிலான அம்சங்களை சாட்ஜிபிடி-யில் சேர்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பயனர்கள் தன்னிடம் கேட்கின்ற கேள்விகள் மற்றும் உரையாடலை நினைவில் வைத்துக் கொள்ளும் வகையிலான அம்சத்தை பெற்றுள்ளது. இப்போதைக்கு இது சோதனை நிலையில் உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களை கொண்டு இந்த அம்சம் டெஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து பயனர்களின் பயன்பாட்டுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் பயனர்களுடனான உரையாடலை தனித்தன்மை கொண்டதாக மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது ஓபன் ஏஐ. சாட்ஜிபிடி ஃப்ரீ மற்றும் சந்தா கட்டணம் செலுத்தும் ‘பிளஸ்’ பயனர்கள் என அனைவருக்கும் இந்த அம்சத்தை பெற முடியும் என தெரிகிறது. இது குறித்த அறிவிப்பு பிளாக் தளத்தில் வெளியாகி உள்ளது.
மேலும், இந்த அம்சத்தில் எந்த உரையாடலை சாட்ஜிபிடி நினைவில் வைத்துக் கொள்ளலாம் அல்லது அனைத்தையும் மறக்கும் வகையிலான கட்டுப்பாடு முழுவதும் பயனர்கள் வசம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் இதனை செட்டிங்ஸ் மூலம் கன்ட்ரோல் செய்யலாம். பிரைவசி, தனிப்பட்ட தரவு சார்ந்த விவரங்களை உறுதி செய்யும் நோக்கில் இந்த கட்டுப்பாடு பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.