திருமலை: ரதசப்தமியான நாளை (பிப்.16), திருமலையில் ஒரே நாளில் 7 வாகனங்களில் மலையப்பர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடை பெற்று வருகின்றன.
ரதசப்தமி விழாவை சூரிய ஜெயந்தி என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர். நாளை இந்த விழாவை வெகு விமரிசையாக கொண்டாட திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இதனை மினிபிரம்மோற்சவம் என்று அழைக்கும் விதத்தில், அன்றைய தினம், திருமலையில் காலை முதல் இரவு வரை தொடர்ந்து 7 வாகனங்களில் உற்சவரான மலையப்பர் மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.
இதை முன்னிட்டு தேவஸ்தான தலைமை பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர், திருப்பதி எஸ்.பி. மலிகா கார்கே ஆகியோர் நேற்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
திருமலையில் உள்ள 4 மாட வீதிகளிலிலும் வாகன சேவையை காண காத்திருக்கும் பக்தர்களுக்காக பொங்கல், புளியோதரை, தயிர் சாதம், உப்புமா மற்றும் நீர்மோர், டீ, காபி, குடிநீர் விநியோகம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பந்தல்கள் போடப்பட்டுள்ளன. வெயிலில் இருந்து பாதுகாக்க மாட வீதிகளில் ‘கூல் பெயிண்ட்’ போடப்பட்டுள்ளது.
ரதசப்தமி விழாவுக்கு நேரடியாக வரும் விஐபிக்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்படும். சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது.முதியோர், மாற்றுத்திறனாளிகள்,கைக்குழந்தையுடன் வரும் பெற்றோர்களுக்கான சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சாமானிய பக்தர்களின் வசதிக்காக இன்று முதல் 17-ம் தேதி வரை திருப்பதியில் வழங்கப்படும்சர்வ தரிசன டோக்கன்களும் ரத்து செய்யப்படுகிறது. பக்தர்கள் திருமலைக்கு வந்து நேரடியாக வைகுண்டம் – 2 காம்ப்ளக்ஸ் வழியாக சென்று சுவாமியை தரிசனம் செய்யலாம். ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் சுவாமியை தரிசிக்க வர வேண்டும். இல்லையேல் அவர்களும் இலவச தரிசன வரிசையில் இணைத்து அனுப்பி வைக்கப்படுவர்.
சிபாரிசு கடிதங்கள் மூலம் திருமலையில் தங்கும் அறைகள் வழங்கப்படாது. சிஆர்ஓ ஜெனரல் மையம் மூலமாக மட்டுமே அறைகள் சாமானிய பக்தர்களுக்கு வழங்கப்படும். பக்தர்களுக்காக 4 லட்சம் லட்டு பிரசாதங்கள் தயார் நிலையில் வைக்கப்படும். மேலும் 4 லட்சம் லட்டுகள் தொடர்ந்து தயாரிக்கப்படும்.
ரதசப்தமியை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலில் நாளை கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை போன்றவற்றை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
ரதசப்தமியான நாளை அதிகாலை 5.30 மணி முதல் 8 மணி வரை சூரியபிரபை, காலை 9 மணி முதல் 10 மணி வரை சின்ன சேஷ வாகனம், காலை 11 மணி முதல் 12 மணி வரை கருட சேவை, மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அனுமன் வாகன சேவை நடைபெறும்.
ஒரேநாளில் 7 வாகனங்களில் உலா: இதைத்தொடர்ந்து மதியம் 2 மணி முதல் 3 மணி வரை சக்கர ஸ்நானமும், மாலை 4 மணி முதல் 5 மணி வரை கற்பக விருட்ச வாகனம், மாலை 6 மணி முதல் 7 மணி வரை சர்வபூபால வாகனம், இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரபை வாகனம் என மலையப்பர் ஒரே நாளில் 7 வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்குஅருள்பாலிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.