மும்பை: “35 ஆண்டுகளுக்குப் இந்தியில் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு சுந்தர் தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பு தற்போது பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘ஜர்னி’ (Journey) என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ‘கதர் 2’ படத்தை இயக்கிய அனில் ஷர்மா இயக்குகிறார். இப்படத்தில் நானா படேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், 35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பாலிவுட் திரும்பியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேட்டி ஒன்றில், “நான் இந்தி படத்தில் நடித்து 35 ஆண்டுகளாகிவிட்டன. ‘ப்ரேம் தான்’ படத்தின் படப்பிடிப்பு 1989-ல் நிறைவடைந்தது. இப்போது நான் முற்றிலும் புதியவராக உணர்கிறேன். நானா படேகருடன் இணைந்து நடிப்பது உற்சாகமளிக்கிறது.
அவர் மிகப்பெரிய நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும். அப்போது நான் தென்னிந்திய திரைப்படங்களில் பிஸியாக இருந்ததால் என்னால் இந்திப் படங்களில் நடிக்க முடியவில்லை. அழுத்தமான கதாபாத்திரம் கொண்ட ஒரு படத்துடன் இந்தியில் மீண்டும் நடிப்பதை முக்கியமாக கருதுகிறேன்” என்றார்.