‘என்னுடைய தவறுதான்’ – சர்பராஸ் கான் ரன் அவுட்டுக்கு ஜடேஜா வருத்தம்

ராஜ்கோட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் அரை சதம் கடந்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார் அறிமுக வீரர் சர்பராஸ் கான். இந்நிலையில், அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் ஜடேஜா.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றன. இந்நிலையில், வியாழக்கிழமை மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் நகரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

33 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில் கேப்டன் ரோகித் மற்றும் ஜடேஜா இணைந்து அபார கூட்டணி அமைத்தனர். 4-வது விக்கெட்டுக்கு 204 ரன்கள் சேர்த்தனர். ரோகித், 131 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அறிமுக வீரர் சர்பராஸ் கானுடன் சேர்ந்து 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஜடேஜா. முதல் நாள் ஆட்டம் முடிய வெறும் சில பந்துகள் மட்டுமே இருக்க சர்பராஸ் ரன் அவுட் ஆனார். 66 பந்துகளில் 62 ரன்களை அவர் எடுத்தார்.

ஜடேஜாவின் இன்ஸ்டா ஸ்டோரி

81-வது ஓவரின் 5-வது பந்தை ஜடேஜா எதிர்கொண்டார். அதனை சிங்கிளாக மாற்ற அவர் முயன்றார். அதன் காரணமாக நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த சர்பராஸ், ரிஸ்க் எடுத்தார். கடைசி நேரத்தில் ஜடேஜா பின் வாங்க தனது விக்கெட்டை விட்டுக் கொடுத்தார் சர்பராஸ். அப்போது ஜடேஜா 99 ரன்கள் எடுத்திருந்தார். அதன்பிறகு சதம் விளாசினார். முதல் நாள் ஆட்டம் முடிந்ததும், ‘தவறு என்னுடையதுதான். நான் தான் ரன் எடுத்த அழைத்தேன். அவருக்காக வருந்துகிறேன்’ என ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்தார்.

'+divToPrint.innerHTML+'