17-ம் நூற்றாண்டில் நிகழும் ஒரு திகிலூட்டும் மர்மங்களைக் கொண்ட கற்பனைக் கதைதான் மம்மூட்டி நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்துள்ள ‘பிரம்மயுகம்’ (Bramayugam) . இப்படத்தை இயக்குநர் ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியிருக்கிறார். பிரபல மலையாள எழுத்தாளர் T.D. ராமகிருஷ்ணனின் பேனா மையில் படத்தில் வரும் வசனங்கள் அழுத்தமாக மனங்களில் பதிந்து கொள்கிறது. ஏற்கெனவே இந்த சாயலில் மலையாளத்தில் ‘குமாரி’ (Kumari) திரைப்படம் வந்திருந்தாலும், இது வேறொரு பாணியில் இருக்கிறது. இரண்டே கால் மணி நேரம் கருப்பு – வெள்ளை காலத்தில் தெற்கு மலபார் பகுதிக்குள் சிக்கித் தவிக்கும் உணர்வை இப்படம் தருகிறது.
ரொம்பவே எளிமையான ஒரு கதை. மலையாளம் தெரியாதவர்கள் பார்த்தால்கூட எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இப்படத்தை இயக்கியிருக்கிறார் ராகுல் சதாசிவன். படம் பார்க்கும்போது மலையாளம் தெரிந்தவர்களுக்கு ஏற்படும், அத்தனை பரவசத்தையும் பயத்தையும் மொழி தெரியாதவர்களுக்கும் இந்தப் படம் கொடுக்கத் தவறவில்லை. முழுக்க முழுக்க கருப்பு – வெள்ளையில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், ஒவ்வொரு காட்சியிலும் மர்மங்கள் நிறைந்த சூழலை உருவாக்கி, பார்வையாளர்களை பதைபதைக்க வைக்கிறது.
கருப்பு – வெள்ளை படம் என்பதால் பார்வையாளர்களின் கவனம் முழுவதும் கதாப்பாத்திரங்களின் மேல் குவிந்துவிடுகிறது. இதனால், கதாப்பாத்திரங்களின் சின்ன சின்ன அசைவையும், நகர்வையும் கூர்ந்து கவனிக்க வைக்கிறது. இதனால், பறவைகள், காற்று, கதவுகளின் சத்தம் என நம் காதுகளும், சூரியன், மழை, பந்தம், விளக்கு, சமையல் என நம் கண்களும் படம் முடியும்வரை எங்கேஜிங்காகி விடுகிறது.
இந்தப் படத்தின் கலை இயக்குநர் ஜோதீஷ் சங்கரின் பணி வியக்க வைக்கிறது. படத்தில் வரும் காட்டுப் புற்களும் , மரங்களும் செடிகளும் பிணைந்து கிடக்கும் அந்த ஒரேயொரு சிதிலமடைந்த வீட்டை மட்டும் வைத்துக்கொண்டு அநாயசமாக மிரளச் செய்திருக்கிறார்.
17-ம் நூற்றாண்டில் தெற்கு மலபார் வனப்பகுதிக்குள் வழித்தவறி செல்கிறார் பாணர் குலத்தைச் சேர்ந்த தேவன் (அர்ஜுன் அசோகன் ). அப்படிச் செல்லும் அவர் வனத்தினுள் சிதிலமடைந்த வீடொன்றில் தஞ்சம் புகுகிறார். அது மணக்கால் கொடுமன் பொட்டி (மம்மூட்டி) என்பவருக்கு சொந்தமானது. அங்கு அவரும் அவரது சமையல்காரரும் (சித்தார்த் பரதன்) வசித்து வருகின்றனர். பாணர் குலத்தைச் சேர்ந்த தேவனின் பாடல் பிடித்துப்போக அந்த வீட்டில் தங்கிக் கொள்ள அனுமதிக்கிறார் கொடுமன் பொட்டி.
வீட்டுக்குள் நுழைந்த நாள் முதலே மர்மங்களை உணரத் தொடங்கும் தேவன், ஒருகட்டத்தில் அங்கிருந்து வெளியேற முடிவு செய்கிறார். தனக்கு சொந்தமான அந்த வீட்டில் தான் நினைக்கும்படிதான் நடந்துகொள்ள வேண்டும் என எச்சரித்து கட்டளையிடுகிறார் கொடுமன் பொட்டி. நாட்கள் நகர்கிறது வீட்டைவிட்டு தப்பிச்செல்லும் முயற்சியில் தோல்வி அடைகிறேன் தேவன். அந்த வீட்டிலுள்ள மர்மங்களையும் அங்கிருந்து தப்பிச் செல்வதற்கான வழிகளையும் தேடுகிறான் தேவன். அதன்பின் என்ன நடக்கிறது? வீட்டிலுள்ள மர்மம் என்ன? தேவன் அங்கிருந்து தப்பித்தானா? இல்லையா? ‘பிரம்மயுகம்’ படத்தின் கதை.
கண்ணூர் ஸ்குவாட், காதல் தி கோர், இப்போது ‘பிரம்மயுகம்’னு மம்மூட்டி தொட்டதெல்லாம் துலங்குகிறது. படத்துக்குப் படம் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றலைக் கொண்டது அவரது நடிப்பு. மெகா ஸ்டார் அந்தஸ்தை எல்லாம் தூக்கி தூரவைத்து விட்டு கதாப்பாத்திரத்துக்கான அர்ப்பணிப்புடன் கூடிய அவரது நடிப்பாற்றலை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எதிர்மறை நிழலாடும் கதாப்பாத்திரத்தை சிரமமின்றி வெகு இயல்பாக கையாளும் அவரது நடிப்பு இப்படத்தில் ஆதிக்கம் செய்திருக்கிறது.
அர்ஜுன் அசோகனின் நடிப்பும் படத்துக்கு பெருமளவில் பலம் சேர்த்திருக்கிறது. அச்சம், கையறு நிலை, பக்தி, பசியென என ஒவ்வொரு உணர்வுகளையும் வெளிப்படுத்தும் விதம் ஈர்க்கிறது. அதேபோல், சித்தார்த் பரதன், அமைதியை வெளிப்படுத்தி, சமமான ஈர்க்கக்கூடிய நடிப்பை வெளிப்படுத்துகிறார். இந்த மூவர் தவிர, அமல்டா லிஸ், மணிகண்டன் ஆர். ஆச்சாரி இவர்கள் இருவரும் படத்தில் உள்ளனர். பெரிதாக இவர்களுக்கு காட்சிகள் இல்லை, என்றாலும் அவர்களது பாத்திரங்களை நிறைவாக செய்துள்ளனர்.
இந்தப் படத்தின் சரிபாதி பாராட்டுகள் தொழில்நுட்பக் குழுவுக்குத்தான். படத்தின் ஒளிப்பதிவாளர் ஷென்னத் ஜலாலின் கேமிரா படம் முழுவதும் திகிலின் நிழலாடச் செய்திருக்கிறது. இவரது சிறப்பான லைட்டிங்ஸ் கதாப்பாத்திரங்களின் உணர்வுப்பூர்வமான வெளிப்பாடுகளை துல்லியமாக்கி இருக்கிறது. இசையமைப்பாளர் கிறிஸ்டோ சேவியர் பின்னணி இசையும், எடிட்டர் ஷபீக் முகமது அலி கட்ஸும் காட்சிக்கு காட்சி விறுவிறுப்பைக் கூட்டுகின்றன.
பாடல்கள் அனைத்தும் திகிலின் படபடப்பைக் குறைத்து ரசிக்க வைக்கிறது. சவுண்ட் எஃபெக்ட்ஸ் அனைத்தும் சிறப்பு. இவர்கள் அனைவரது நேர்த்தியான உழைப்பால் ‘பிரம்மயுகம்’ திரைப்படம் மோனோகுரோம் வடிவத்தில் கிளாஸ்ட்ரோபோபிக் அனுபவத்தைக் கொடுக்கிறது. திகிலூட்டும், மர்மங்கள் நிறைந்த நாட்டுப்புறக் கதைகளில் ஆர்வம் கொண்டவர்கள் மிஸ் பண்ணாமல் திரையரங்குகளில் காண வேண்டிய திரைப்படம் இந்த ‘பிரம்மயுகம்’.