“லட்சத்தில் ஒரு பவுலர் அஸ்வின்!” – 500 டெஸ்ட் விக்கெட்டுக்கு குவியும் வாழ்த்து

ராஜ்கோட்: டெஸ்ட் போட்டிகளில் தனது 500-வது விக்கெட்டை வீழ்த்தி இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார். இவரின் இந்த சாதனையை அடுத்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், “சாதனைகளை முறியடித்து கனவுகளை செதுக்குகிறார் சென்னை பையன் அஸ்வின். தான் வீசும் ஒவ்வொரு திருப்பத்திலும் (டர்ன்), உறுதிப்பாடு மற்றும் திறமையின் கதையை பின்னுகிறார். அவரின் இந்த சாதனை ஓர் உண்மையான ஸ்பின்டாகுலர் மைல்கல்லைக் குறிக்கிறது. மாயாஜால சுழலால் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500-வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய அஸ்வினுக்கு வாழ்த்துகள். இன்னும் அதிக விக்கெட்டுகள் மற்றும் வெற்றிகள் பெற வேண்டும் எங்களின் ஜாம்பவானே!” என்று முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர்: “லட்சத்தில் ஒரு பவுலரான அஸ்வினுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் 500வது விக்கெட். AshWIN the SpinNER இந்த பெயரிலேயே வின்னர் (WINNER) இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்பது மிகப்பெரிய மைல்கல். வாழ்த்துக்கள், சாம்பியன்!”

தனுஷ்: “வாழ்த்துகள் அஸ்வின். இது மகத்தான சாதனை. எங்களை பெருமை அடைய செய்ததற்கு நன்றி.”

டெஸ்ட் போட்டிகளில் தனது 500-வது விக்கெட்டை வீழ்த்தி இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார். ராஜ்கோட்டில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஜாக் க்ராவ்லியின் விக்கெட்டை வீழ்த்தி இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார் அஸ்வின். விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியிலேயே இந்த சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த வாய்ப்பு தவறியது.

98-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதன்மூலம், குறைந்த போட்டிகளில் 500 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். முத்தையா முரளிதரன் 87 டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட் வீழ்த்தினார்.

அதேநேரம், இந்த சாதனையை படைப்பதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 500+ விக்கெட்களை வீழ்த்திய ஒன்பதாவது பவுலர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார். முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன், அனில் கும்ப்ளே, லயன் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் இந்த சாதனையை இதற்கு முன்னர் படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் இரண்டாவது பவுலர் ஆனார் அஸ்வின். அனில் கும்ப்ளே 619 விக்கெட்களை வீழ்த்தி முன்னணியில் உள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த 37 வயதான அஸ்வின், கடந்த 2011 முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். அதோடு 3,166 ரன்களை பதிவு செய்துள்ளார். ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 3வது பவுலராகவும், ஆல்ரவுண்டர்களில் 2-வது இடத்திலும் அஸ்வின் உள்ளார்.