கும்பகோணத்தில் இருந்து முதன்முறையாக நவக்கிரகக் கோயில்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

கும்பகோணம்: கும்பகோணத்தில் இருந்து நவகிரகக் கோயில்களுக்கு முதன்முறையாக வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளன. இதனை போக்குவரத்துத் துறை அமைச்சர் வரும் 24-ம் தேதி தொடங்கி வைக்கிறார் என அரசுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் கே.எஸ்.மகேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘நவக்கிரகக் கோயில்களுக்குச் சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணிகள் மற்றும் பக்தர்கள் நீண்டநாள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து, வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 2 நாட்களில் மட்டும் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு 9 நவக்கிரகக் கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்து விட்டு, மீண்டும் கும்பகோணம் பேருந்து நிலையத்துக்கு வந்தடையும் விதமாகச் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்து இயக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, நவக்கிரகக் கோயில்களுக்கு இயக்கப்படும் இந்த சிறப்புப் பேருந்தில் பயணக் கட்டணமாக ஒருவருக்கு ரூ.750-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சிறப்புப் பேருந்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இந்தப் பேருந்து, கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு, காலை 6 மணிக்கு திங்களூர் சந்திரன் பகவான், 7.15 மணிக்கு ஆலங்குடி குருபகவான் தரிசனம் செய்த பின் காலை உணவு வேளை முடிந்த பிறகு 9 மணிக்கு திருநாகேஸ்வரம் ராகுபகவான், 10 மணிக்கு சூரியனார் கோயில் சூரிய பகவான், 11 மணிக்கு கஞ்சனூர் சுக்கிர பகவான், 11.30 மணிக்கு வைத்தீஸ்வரன் கோயில் செவ்வாய் பகவான், மதியம் 12.30 மணி வரை 1.30 மணி வரை மதிய உணவு இடைவேளை, தொடர்ந்து 2.30 மணிக்கு திருவெண்காடு புதன் பகவான், மாலை 4 மணிக்கு கீழப்பெரும்பள்ளம் கேது பகவான், 6 மணிக்கு திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலுக்கு சென்றடைந்து, அங்கு தரிசனம் மேற்கொண்டப் பிறகு, அங்கிருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு, கும்பகோணம் பேருந்து நிலையத்திற்கு வந்தடைகிறது.

இந்தச் சிறப்புப் பேருந்து, வரும் 24-ம் தேதி முதல் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயங்கும். நவக்கிரகக் கோயில்களுக்குச் செல்லும் பேருந்தில் பயணம் செய்ய விருப்பம் உள்ளவர்கள், மொபைல் ஆப் www.tnstc.in (Mobile App) Android/I phone செல்போன் மூலமாக முன்பதிவு செய்து தங்களது பயணச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.