சென்னை: சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘எஸ்கே21’ படத்துக்கு ‘அமரன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவரது பிறந்தநாளை முன்னிட்டு டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அவரது 21-வது படமான இதை, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸுடன் இணைந்து தயாரிக்கிறது. இதில் அவர் ராணுவ வீரராக நடிக்கிறார். அவர் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
டீசர் எப்படி? – தமிழில் மீண்டும் ஒரு தேசபக்தி படம். கோலிவுட்டில் தேசபக்தி அலை ஓய்ந்த நிலையில், தற்போது அதனை சிவகார்த்திகேயன் கையிலெடுத்திருக்கிறார். காஷ்மீர் மக்கள் இந்திய ராணுவப் படையை பிடித்து அவர்களை கொலை செய்வது போல டீசர் தொடங்குகிறது. அவர்களின் சுதந்திர முழக்கம் ஒலிக்கப்படுகிறது. துப்பாக்கி, குண்டு வெடிப்பு, ரத்தம், தெறிக்கும் தோட்டா என பயணிக்கும் டீசரில், “இதான் இந்தியன் ஆர்மி முகம்னு காட்டு”, “தீவிரவாதம்” போன்றவை இந்தியா, தேசபக்தி போன்ற பதங்களை உறுதி செய்கின்றன.
ராணுவ கதாபாத்திரத்துக்கு ஏற்ற சிவகார்த்திகேயனின் உடலமைப்பு கவனிக்க வைக்கிறது. இந்தியில் தேசபக்தி, தீவிரவாதம் தொடர்பான படைப்புகள் தொடர்ந்து வரும் நிலையில், தற்போது கோலிவுட்டிலும் இந்தப் போக்கு தொடங்கியிருக்கிறது. கமல்ஹாசன் தயாரிப்பும் கவனிக்க வைக்கிறது. காஷ்மீர் மக்களின் விடுதலை பற்றி படம் பேசுகிறதா அல்லது அவர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கிறதா என்பதை படம் வந்த பின்பு தெரியவரும். டீசர் வீடியோ: