ராஜ்கோட் டெஸ்ட் | பென் டக்கெட் அபார சதம்: 2-ம் நாள் முடிவில் இங்கிலாந்து 207/2

ராஜ்கோட்: ராஜ்கோட் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் அபாரமாக விளையாடி சதம் விளாசினார்.

ராஜ்கோட்டில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில் குல்தீப் யாதவ் 4 ரன்களில் ஆண்டர்சன் பந்திலும், ஜடேஜா 112 ரன்களில் ஜோ ரூட் பந்திலும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.

இதன்பின் ரவிச்சந்திரன் அஸ்வின், துருவ் ஜூரல் இருவரும் கூட்டணி அமைத்தனர். நிதானமாக ஆடிய இக்கூட்டணி 70 ரன்களுக்கு மேல் சேர்த்தது. இதனால் இந்திய அணி 400 ரன்களை தொட்டது. பின்னர் 37 ரன்களில் அஸ்வின் வெளியேற, 46 ரன்கள் சேர்த்த நிலையில் துருவ் ஜூரல் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு அவுட் ஆனார். இறுதிக்கட்டத்தில் பும்ரா 26 ரன்கள் சேர்க்க 445 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இந்திய அணி. இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 4 விக்கெட், ரெஹான் அகமது 2 விக்கெட் கைப்பற்றினர்.

இதன்பின் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸை விளையாடியது. அந்த அணியின் ஓப்பனிங் ஜோடிகளான ஜாக் க்ராவ்லி மற்றும் பென் டக்கெட் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். பென் டக்கெட் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த வேளையில் ஜாக் க்ராவ்லி 15 ரன்கள் எடுத்து பொறுமையாக விளையாடினார்.

இந்தக் கூட்டணியை பிரித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி இருந்த சமயத்தில் அஸ்வின் பந்துவீச அழைக்கப்பட்டார். அதன்படி வீசிய முதல் ஓவரில் மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த அஸ்வின், தனது இரண்டாவது ஓவரில் ஜாக் க்ராவ்லியை வீழ்த்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இது அஸ்வினின் 500வது விக்கெட்டாக அமைந்தது.

இதன்பின் ஆலி போப் உடன் கூட்டணி அமைத்தார் பென் டக்கெட். ஜாக் க்ராவ்லி போல் ஆலி போப்பும் நிதானத்தை கடைபிடிக்க, இங்கிலாந்தின் பாஸ்பால் அணுகுமுறையை கடைபிடித்து பவுண்டரிகளாக விளாசினார் பென் டக்கெட். இவரது அதிரடி ஆட்டம் காரணமாக பார்ப்பது டெஸ்ட் கிரிக்கெட்டாக ஒருநாள் கிரிக்கெட்டாக என்கிற சந்தேகம் எழுந்தது.

அந்த அளவுக்கு பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை விளாசினார். இவரை அவுட் ஆக்க இந்திய அணி எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் 89 பந்துகளில் சதம் அடித்தார். சதம் அடிக்கும்போதே இவர் அடித்த பவுண்டரிகள் 18 மற்றும் ஒரு சிக்ஸரும் அடக்கம்.

இதன்பின் பவுண்டரிகளை விளாசி ஆட்டநேர முடிவில் 118 பந்துகளுக்கு 133 ரன்கள் எடுத்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக உள்ளார். ஆலி போப் 39 ரன்கள் எடுத்து இரண்டாவது விக்கெட்டாக, ஜோ ரூட் 9 ரன்கள் உடன் நாட் அவுட் பேட்ஸ்மேனாக உள்ளார்.

இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்துள்ளது. அஸ்வின், சிராஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். தற்போது, முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை விட 238 ரன்கள் பின்னடைவில் உள்ளது இங்கிலாந்து.