ஜூனியர் என்டிஆரின் ‘தேவரா’ அக்.10 ரிலீஸ்!

ஹைதராபாத்: ஜூனியர் என்டிஆரின் ‘தேவரா’ படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் 2022-ம் ஆண்டு வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜூனியர் என்டிஆர் ‘ஆச்சார்யா’ படத்தை இயக்கிய இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிக்கிறார்.

‘தேவரா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துவருகிறார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார். பிரகாஷ்ராஜ், சைஃப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஹைதராபாத்தில் தொடங்கின. இரண்டு பாகங்களாக உருவாக உள்ள இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.