ராஜ்கோட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி பென் டக்கெட்டின் அதிரடி சதத்தால் 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 207 ரன்கள் சேர்த்தது.
ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன்ஷா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 86 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 326 ரன்கள் குவித்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10, ஷுப்மன்கில் 0, ரஜத் பட்டிதார் 5 ரன்களில் நடையை கட்டிய நிலையில் ரோஹித் சர்மா 131, சர்பராஸ் கான் 62 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தனர். ரவீந்திர ஜடேஜா 110,குல்தீப் யாதவ் ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. குல்தீப் யாதவ் 4 ரன்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் பென் ஃபோக்ஸிடம் பிடிகொடுத்து வெளியேறினார். ரவீந்திர ஜடேஜா 225 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் எடுத்த நிலையில் ஜோ ரூட் பந்து வீச்சில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 331 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்தநிலையில் அறிமுக விக்கெட் கீப்பர்பேட்ஸ்மேனான துருவ் ஜூரெலுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
ரெஹான் அகமது, மார்க் வுட் ஆகியோரது பந்து வீச்சில் துருவ் ஜூரெல் சிக்ஸர்கள் விளாசினார். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 117-வது ஓவரில்400 ரன்களை கடந்தது. அஸ்வின் 89 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்த நிலையில் ரெஹான் அமகது பந்தை மிட் ஆன் திசையில் அடித்த போதுஆண்டர்சனிடம் கேட்ச் ஆனது. 8-வது விக்கெட்டுக்கு துருவ்ஜூரெலுடன் இணைந்து அஸ்வின் 175 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்தார். சிறிது நேரத்தில் துருவ் ஜூரெல்104 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரி களுடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் ரெஹான்அகமது பந்தில் பென் ஃபோக்ஸிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
இதன் பின்னர் ஜஸ்பிரீத் பும்ரா மட்டையை சுழற்றினார். அதிரடியாக விளையாடிய பும்ரா 28 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்த நிலையில் மார்க் வுட் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். முடிவில் 130.5 ஓவர்களில் 445 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது இந்திய அணி. முகமது சிராஜ் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் 4, ரெஹான் அகமது 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் அதிரடியான தொடக்கம் கொடுத்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய ஸாக் கிராவ்லி 28 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 13.1 ஓவரில் 89 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் ஆலி போப் களமிறங்க இந்திய சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தாக்குதல் ஆட்டம் தொடுத்தார் பென் டக்கெட். ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களுடன் மட்டையை சுழற்றிய பென் டக்கெட் 88 பந்துகளில், ஒரு சிக்ஸர், 19 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார்.
சர்வதேச டெஸ்டில் இது அவரது3-வது சதமாக அமைந்தது. மறுமுனையில் சீராக ரன்கள் சேர்த்து வந்த ஆலி போப் 55 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்த நிலையில் முகமது சிராஜ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.2-வது விக்கெட்டுக்கு பென் டக்கெட்டுடன் இணைந்து 93 ரன்கள் சேர்த்தார் ஆலி போப். 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 35 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது.
பென் டக்கெட் 118 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 21 பவுண்டரிகளுடன் 133 ரன்களும் ஜோ ரூட் 9 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். கைவசம் 8 விக்கெட்கள் இருக்க 238 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி.
500 விக்கெட்கள் வீழ்த்திய அஸ்வின்: ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஸாக் கிராவ்லியை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் அஸ்வின் கைப்பற்றிய 500-வது விக்கெட் இதுவாகும். இந்த மைல் கல் சாதனையை அஸ்வின் தனது 98-வது டெஸ்ட் போட்டியில் நிகழ்த்தி உள்ளார். இதன் மூலம் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீரர்களில் முதலிடத்தையும், உலக அரங்கில் 2-வது இடத்தையும் பிடித்துள்ளார் அஸ்வின். இந்த வகை சாதனையில் இந்திய வீரர்களில் அனில் கும்ப்ளே 105 போட்டிகளில் 500 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இலங்கையின் முத்தையா முரளிதரன் 87 ஆட்டங்களில் 500 விக்கெட்களை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார்.
3-வது விரைவு சதம்: ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் பென் டக்கெட் 88 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார் பென் டக்கெட். இதற்கு முன்னர் அந்த அணியின் கிரஹாம் கூச் 1990-ம் ஆண்டு லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 95 பந்துகளில் சதம் விளாசியதே சாதனையாக இருந்தது. இதை முறியடித்து தற்போது புதிய சாதனை படைத்துள்ளார் பென் டக்கெட்.
அதேவேளையில் இந்திய மண்ணில் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய 3-வது வெளிநாட்டு வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் பென் டக்கெட். இந்த வகை சாதனையில் 2001-ம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் 84 பந்துகளில் சதம் விளாசி முதலிடத்தில் உள்ளார். முன்னதாக 1974-ல் பெங்களூருவில் நடைபெற்ற டெஸ்டில் மேற்கு இந்தியத் தீவுகளின் கிளைவ் லாயிட் 85 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.
5 ரன்கள் அபராதம்: ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டத்தில் 102-வது ஓவரை ரெஹான் அமகது வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் அஸ்வின் ரன் சேர்ப்பதற்காக ஆடுகளத்தின் நடுப்பகுதியில் ஓடினார். இதே தவறை முதல் நாள் ஆட்டத்தில் ரவீந்திர ஜடேஜா செய்திருந்தார். ஐசிசி விதிமுறைகளின்படி 2-வது முறையாகவும் இந்த தவறு நடந்ததால் களநடுவர் ஜோயல் வில்சன், அஸ்வினை எச்சரித்ததோடு இந்திய அணிக்கு 5 ரன்களை அபராதமாக விதித்தார். இதனால் இங்கிலாந்து முதல் பந்தை சந்திப்பதற்கு முன்னதாகவே 5/0 என பேட்டிங்கை தொடங்கியது.