பசில் ஜோசப் இயக்கத்தில் சக்திமான் ஆகும் ரன்வீர் சிங்

தூர்தர்ஷனில் 1997-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற தொடர், ‘சக்திமான்’. சுமார் 8 வருடங்கள் ஒளிபரப்பான இந்த தொடர், குழந்தைகளுக்குப் பிடித்த சூப்பர் ஹீரோ தொடராக அப்போது இருந்தது. இந்த தொடரை முகேஷ் கன்னா நடித்து தயாரித்திருந்தார். தின்கர் ஜெயின் இயக்கி இருந்தார். இதற்கிடையே, நடிகர் முகேஷ் கன்னா கடந்த சில மாதங்களுக்கு முன் ‘சக்திமானை’ சினிமாவாக எடுக்கப் போவதாக அறிவித்திருந்தார்.

மெகா பட்ஜெட்டில் சோனி பிக்சர்ஸ் இந்தியா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் இதில் சக்தி மான் கேரக்டரில் ரன்வீர் சிங் நடிக்க இருக்கிறார். மலையாள இயக்குநரும் நடிகருமான பசில் ஜோசப் இயக்க இருப்பதாகவும் 2025-ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பசில் ஜோசப், கோதா, மின்னல் முரளி உட்பட சில படங்களை இயக்கி இருக்கிறார். ஜெய ஜெய ஜெய ஜெய ஹே உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.