ஏஐ மூலம் எஸ்பிபி குரல்: தெலுங்கு பட இசையமைப்பாளருக்கு எஸ்.பி.பி.சரண் நோட்டீஸ்

சென்னை: அனுமதி பெறாமல் தனது தந்தையின் குரலை ஏஐ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண், தெலுங்கு பட தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தருண் பாஸ்கர் இயக்கி நடித்துள்ள தெலுங்கு படமான ‘கீடா கோலா’ கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியானது. இதில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை இந்தப் படத்தின் இசையமைப்பாளர் விவேக் சாகர் அவருடைய பேட்டி ஒன்றில் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால், இது குறித்து தங்களிடம் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதால் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.சரண் சட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக எஸ்.பி.சரண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “எனது அப்பா மறைவுக்குப் பிறகு தொழில்நுட்பம் மூலம் அவரது குரல் பயன்படுத்தப்படுவது என்பது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால், அதை எங்களுக்குத் தெரியாமலும், அனுமதி பெறாமலும் பயன்படுத்தப்படுவது என்பது வேதனையான விஷயம்.

வணிகச் சுரண்டலுக்காக ஒரு லெஜெண்டின் குரல் இப்படிப் பயன்படுத்தக் கூடாது. தற்போதும், வருங்காலத்திலும் இதே நிலை தொடர்ந்தால், இசைத் துறையில் தங்களது குரலை சொத்தாக கருதும் பாடகர்களின் வாழ்வாதாரம் ஆபத்துக்குள்ளாகும்” என வருத்தம் தெரிவித்துள்ளார்.

முறையான அனுமதி பெறாமல் தனது தந்தையின் குரலை பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும், நஷ்ட ஈடு வழங்க வேண்டும், ராயல்டியில் குறிப்பிட்ட பங்கை கொடுக்க வேண்டும் என்றும் அவர் இசையமைப்பாளருக்கும், பட தயாரிப்பாளருக்கும் அனுப்பியுள்ள நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.