பழநி: ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண் பச்சை சேலை உடுத்தி, மாலை அணிந்து ‘அரோகரா’ முழக்கத்துடன், மூணாறில் இருந்து பழநி முருகன் கோயிலுக்கு நேற்று பாதயாத்திரையாக வந்தார்.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் மரியா. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மூணாறு போதமேடு பகுதிக்கு வந்துள்ளார். இங்குள்ள மக்கள் பழநி முருகன் கோயிலுக்கு மாலை அணிந்து பாதயாத்திரையாகச் செல்வதை அறிந்தார். இதேபோல், தானும் பழநி கோயிலுக்கு பாதயாத் திரையாகச் செல்ல விரும்பினார். இதையடுத்து, போதமேடு பகுதி பாதயாத்திரை பக்தர்களுடன் இணைந்து முதல் முறையாக கடந்தாண்டு பழநிக்கு வந்தார். இந்நிலையில், கடந்த வாரம் ஸ்பெயினில் இருந்து மூணாறுக்கு வந்த மரியா, முதல் முறையாக முருகனுக்கு மாலை அணிந்து, போதமேடு பகுதியைச் சேர்ந்தவர்களுடன் பிப்.15-ம் தேதி பழநிக்கு பாதயாத்திரை புறப்பட்டார்.
மரியா உட்பட பாதயாத்திரைக் குழுவினர் நேற்று மாலை பழநியை அடைந்தனர். அவர்கள், பழநி அடிவாரம் பாத விநாயகர் கோயிலில் தரிசனம் செய்தனர். இன்று (பிப்.18) காலை, பழநி மலைக் கோயிலில் தரிசனம் செய்ய உள்ளனர். பச்சை சேலை உடுத்தி, மாலை அணிந்து ‘அரோகரா’ முழக்கத்துடன் வந்த மரியாவை மற்ற பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.