சென்னை: இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ பட டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், ஒரு கையில் பெரியார் சிலையும், மறு கையில் பிள்ளையார் சிலையும் வைத்திருக்கும் அருண் விஜய்யின் காட்சி கவனம் பெற்றுள்ளது.
இயக்குநர் பாலா, சூர்யா நடிப்பில் ‘வணங்கான்’ படத்தை இயக்கினார். ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், திடீரென படம் கைவிடப்பட்டது. பின்னர், இந்தப் படத்தில் இருந்து சூர்யா விலகினார். இதுபற்றி பாலா வெளியிட்ட அறிக்கையில், “வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு வருத்தம்தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது” என்று கூறியிருந்தார்.
இதையடுத்து. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். மிஷ்கின், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்நிலையில், பாலா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
டீசர் எப்படி? – அருண் விஜய்யை மொத்தமாக உருமாற்றியிருக்கிறார் இயக்குநர் பாலா. அவரது படங்களில் வரும் பரட்டை தலையுடன் கூடிய வினோதமான, மனித உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்தாத ஹீரோவாக அருண் விஜய். முரட்டுத்தனமான இறுக்கமான கதாபாத்திரத்தில் வலியை சுமந்து திரிவது, அடித்து துவம்சம் செய்வது, இறுதியில் உறுமுவது என அக்மார்க் பாலா பட ஹீரோவாக கவனம் பெறுகிறார்.
மிஷ்கின், சமுத்திரகனி வந்து செல்கின்றனர். எதையும் கணிக்கமுடியாத வகையில் வசனங்களில்லாமல் நகரும் டீசரில், கிணற்றியிலிருந்து ஒரு கையில் பெரியாரையும், மறு கையில் பிள்ளையாரையும் சுமந்தபடி மேலெழுந்து வருகிறார் அருண் விஜய்.
குமரிக்கடல் பகுதியில் உள்ள திருவள்ளூவரின் சிலையும், தேவாலயமும் காட்டப்படுகிறது. படம் அப்பகுதியைச் சுற்றி நடப்பதை டீசர் உறுதி செய்கிறது. பின்னணியில் உலுக்கை உள்ளிட்ட இசைக்கருவிகளுடன் அமைக்கப்பட்ட பின்னணி இசை பாலா படம் தான் என்பதை நிறுவுகிறது. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. டீசர் வீடியோ: