GOAT Debate | ‘மெஸ்ஸியும் இல்லை, ரொனால்டோவும் இல்லை’ – எடன் ஹசார்ட் கருத்து

பிரஸ்ஸல்ஸ்: கால்பந்தாட்ட உலகின் தலைசிறந்த வீரர் யார் என்பது குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார் பெல்ஜியம் நாட்டு அணியின் முன்னாள் கேப்டன் எடன் ஹசார்ட். அது மெஸ்ஸியும் இல்லை, ரொனால்டோவும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கால்பந்தாட்ட உலகின் ஜாம்பவான்களின் பட்டியலில் அர்ஜென்டினாவின் மெஸ்ஸியும், போர்ச்சுகலின் ரொனால்டோவும் நிச்சயம் இருப்பார்கள். இவர்கள் இருவரில் யார் தலைசிறந்தவர் (GOAT) என்ற ஒப்பீடுகள் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும். அது அவர்கள் தேசிய அணிக்காக விளையாடினாலும், கிளப் அணிக்காக விளையாடினாலும் நீடிக்கும். அவ்வப்போது இருவரது கையும் ஒருவருக்கு ஒருவர் ஓங்கி நிற்கும்.

இந்த சூழலில் இது குறித்து தனது கருத்தை எடன் ஹசார்ட் தெரிவித்துள்ளார். அவர் கலந்து கொண்ட பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் ‘மெஸ்ஸி அல்லது ரொனால்டோ: இருவரில் யார் தலைசிறந்த வீரர்?’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

“என்னைப் பொறுத்தவரை மெஸ்ஸி தான். கால்பந்து குறித்து பேசினால் அவரது பெயர் நிச்சயம் நினைவுக்கு வரும். இதில் சிலருக்கு மாற்று கருத்து இருக்கலாம். ரொனால்டோ சிறந்த கோல் ஸ்கோரர். அதோடு அணிக்கு கோப்பைகளைக் வென்று கொடுக்கும் தலைசிறந்த வீரரும் கூட. ஆனால், என்னைப் பொறுத்தவரையில் ஜினாடின் ஜிடான் தான் தலைசிறந்த வீரர்” என அவர் தெரிவித்துள்ளார்.

ஜினாடின் ஜிடான்: பிரான்ஸ் நாட்டு அணிக்காக 1994 முதல் 2006 வரையில் சர்வதேச கால்பந்து போட்டிகளில் ஜிடான் விளையாடியவர். அட்டேக்கிங் மிட்-ஃபீல்டர். பிரான்ஸ் அணிக்காக 108 போட்டிகளில் விளையாடி 31 கோல்கள் பதிவு செய்துள்ளார். 1998-ல் சாம்பியன் பட்டம் வென்ற உலகக் கோப்பை அணியில் விளையாடியவர். 2006 உலகக் கோப்பை தொடரில் சிறந்த வீரருக்கான விருதை வென்றவர்.

'+divToPrint.innerHTML+'