தமிழக அரசின் உதவியை எதிர்பார்க்கும் பார்வையற்றோர் கிரிக்கெட் அணி வீரர்!

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகே உள்ள துரைச்சாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சிவசுப்பிரமணியன். இவரது மகன் மகாராஜா(23). பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர், இளங்கலை பட்டப்படிப்பு படித்துள்ளார்.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான மகாராஜா, கடந்த ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற உலக பார்வையற்றோருக்கான விளையாட்டு போட்டிகளில், இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றார். இப்போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்ற ஒரே நபர் இவர்.

அப்போது பயிற்சியின்போது தலையில் காயம் ஏற்பட்டதால், இந்திய அணி விளையாடிய 6 போட்டிகளில், 3 ஆட்டங்களில் மட்டும் பங்கேற்றார். இந்த போட்டியில் இந்திய அணி 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது.

“போட்டியில் பங்கேற்ற மற்ற மாநிலத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு, அந்தந்த மாநில அரசுகள் பரிசுத்தொகை வழங்கி கவுரவப்படுத்தி உள்ளன. ஆனால், தமிழ்நாடு அரசு தனக்கு அங்கீகாரம் வழங்கவில்லை” என, மகாராஜா கவலையுடன் தெரிவித்தார்.

இந்நிலையில், துபாய் நாட்டில் பிப்ரவரி 22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த பார்வையற்றோர் அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதில், மகாராஜா இந்திய அணியில் பங்கேற்று விளையாட உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: தந்தை சிவசுப்பிரமணியன் இறந்துவிட்ட நிலையில், தாய் சண்முகக்கனி நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வருகிறார்.

பாளையங்கோட்டை பார்வையற்றோர் பள்ளியில் படித்தபோது, அங்குள்ள மாணவர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடினேன். எனக்கு பேட்டிங், இடது கை வேகப்பந்து வீச்சு கைகொடுத்தது.

திருநெல்வேலி மாவட்ட அணிக்காக விளையாடி உள்ளேன். கடந்த 2018-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு பார்வையற்றோர் அணிக்காக விளையாடி வருகிறேன். கடந்த ஆண்டு இந்திய அணிக்கு தேர்வு பெற்று, இங்கிலாந்தில் நடந்த உலக பார்வையற்றோர் விளையாட்டு போட்டிகளில், கிரிக்கெட் போட்டியில் விளையாடினேன்.

தற்போது துபாயில் நடைபெற உள்ள போட்டியில் இந்திய அணிக்காக விளையாட 2-வது முறையாக தேர்வாகி உள்ளேன்.

இந்திய அணியில் உள்ள மற்ற வீரர்கள் அந்தந்த மாநில முதல்வர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரே வீரர் நான் மட்டும் தான்.

மற்ற மாநிலங்களைச் சேர்ந்த பார்வையற்ற வீரர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில், எனக்கு இதுவரை வழங்கவில்லை.

எனக்கு அரசுப்பணி வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். கனிமொழி எம்.பி., சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன் ஆகியோரிடம் முறையிட்டுள்ளேன். அவர்கள் எனக்கு உதவுவார்கள் என எதிர்பார்க்கிறேன் என்றார் அவர்.