புதுடெல்லி: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் வரும் மார்ச் 22-ம்தேதி தொடங்கும் என ஐபிஎல் சேர்மன் அருண் துமால் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 17-வது சீசனுக்கான போட்டி அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. இதற்கு காரணம் பொதுத்தேர்தல்தான். வரும் ஏப்ரல், மே மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலக்கட்டங்களில் தான் ஐபிஎல் டி 20 தொடரின் போட்டிகளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐபிஎல் அட்டவணை அறிவிப்பதில் தாமதம் நிலவுகிறது.
இந்நிலையில் ஐபிஎல் சேர்மன் அருண் துமால் கூறும்போது, “ஐபிஎல் தொடரின் முதல் 15 நாட்களுக்கான அட்டவணை மட்டுமே அறிவிக்கப்படும், மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை விவரம் பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் முடிவு செய்யப்படும்.
மார்ச் 22-ம் தேதி தொடரை தொடங்க வேண்டும் என திட்டமிட்டுள்ளோம். ஐபிஎல் போட்டி அட்டவணை தொடர்பாக அரசுத்துறைகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம், முதலில் ஆரம்ப கட்ட போட்டிகளின் அட்டவணையை வெளியிடுவோம். முழு போட்டியும் இந்தியாவில் நடைபெறும்” என்றார்.
மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் ஐபிஎல் தொடரின் முழு அட்டவணையும் வெளியாகும் என தெரிகிறது. 2009-ம் ஆண்டு ஐபிஎல் தொடர், பொதுத் தேர்தல் காரணமாக தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. இதன் பின்னர் 2014-ம் ஆண்டு தேர்தலையொட்டி ஐபிஎல் தொடரின் ஒரு பகுதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. இருப்பினும் 2019-ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்ற காலங்களில் ஐபிஎல் தொடர் முழுவதுமே இந்தியாவில் நடத்தப்பட்டது.
இம்முறை வரும் ஜூன் 2-ம் தேதி ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி அயர்லாந்துடன் மோதுகிறது. டி 20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடரை மே மாதம் கடைசிக்குள் முடிக்கும் வகையில் போட்டி அட்டவணை தயாராகி வருகிறது. இதனால் ஐபிஎல் இறுதிப் போட்டி மே 26-ம் தேதி நடத்தப்படக்கூடும் என கூறப்படுகிறது.
ஐபிஎல் விதிமுறைகளின்படி கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் விளையாடிய அணிகளே இம்முறை தொடக்க ஆட்டத்தில் மோத வேண்டும். இதன்படி மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தக்கூடும் என கருதப்படுகிறது.