முன்கூட்டியே வெளியாகிறது பிருத்விராஜின் ‘ஆடு ஜீவிதம்’ – புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

கொச்சி: பிருத்விராஜ் சுகுமாறன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆடு ஜீவிதம்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படம் வரும் மார்ச் 28ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

மலையாள சினிமாவின் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் மிக முக்கியமான படம் ‘ஆடு ஜீவிதம்’. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ‘ஆடு ஜீவிதம்’ நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. படத்தை ப்ளஸ்ஸி இயக்க, பிருத்விராஜ், அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு சுனில் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வீட்டுக் கடனை அடைக்கவும், சிறிய அறை கட்டுவதற்கும் அரேபிய தேசத்துக்கு புலம்பெயரும் மலையாளி ஒருவர் அங்கு சென்று ஆடு மேய்ப்பவராக மாறுவதையும் அதைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதுதான் ‘ஆடு ஜீவிதம்’ நாவலின் கதை.

வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்த ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படம், முன்கூட்டியே வெளியாகிறது. இதற்கான புதிய ரிலீஸ் தேதியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி இப்படம் மார்ச் 28ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக புதிய போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது.