“அசிங்கவாதிகளாக சில அரசியல்வாதிகள்” – த்ரிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள்

சென்னை: நடிகை த்ரிஷா குறித்து ஏ.வி.ராஜூ என்ற அரசியல் பிரமுகர் பேசிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், திரையுலகைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜூ. அண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து யூடியூப் பேட்டி ஒன்றில் பேசிய ஏ.வி.ராஜூ, கூவத்தூர் சம்பவம் குறித்து சில சர்ச்சையான கருத்துகளை பகிர்ந்தார். அதில் நடிகை த்ரிஷா குறித்து பேசிய கருத்துகள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. அவர் பேசிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து திரையுலகைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில், “இனிமேல் சட்டரீதியாகத்தான் எல்லாவற்றையும் சொல்லபோகிறேன்” என்று கொந்தளிப்புடன் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்ட ஏ.வி.ராஜூ, அதில் தான் பேசிய தவறாக சித்தரிக்கப்பட்டதாகவும், த்ரிஷாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் த்ரிஷாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பலரும் குரல் கொடுத்துள்ளனர்.

நடிகர் விஷால்: ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒரு முட்டாள் நபர் நம் திரையுலகைச் சேர்ந்த ஒருவரைப் பற்றி மிகவும் கேவலமாக பேசியதாகக் கேள்விப்பட்டேன். உங்கள் பெயரையோ, நீங்கள் குறிவைத்த நபரின் பெயரையோ நான் குறிப்பிட மாட்டேன், ஏனென்றால் நீங்கள் விளம்பரத்துக்காக இதைச் செய்தீர்கள் என்பது எனக்குத் தெரியும். நான் நிச்சயமாக பெயர்களைக் குறிப்பிட மாட்டேன், ஏனென்றால் நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமல்ல, திரையுலகில் சக கலைஞர்களும் கூட. உண்மையைச் சொன்னால், நான் உங்களைக் கண்டிக்க விரும்பவில்லை. ஆனால் நீங்கள் நரகத்தில் அழுகுவீர்கள் என்று நம்புகிறேன்.

ஆர்.கே.செல்வமணி (பெப்ஸி): ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நடந்த போட்டியில் 2017-ல் கூவத்தூரில் நடந்ததாக நடிகை த்ரிஷா அவர்களை சம்பந்தப்படுத்தி ஏ.வி.ராஜூ என்பவர் சில தரமற்ற, அவதூறுகளை கூறியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் பல நடிகைகள் என்று பலரையும், நடிகர் கருணாஸையும் சம்பந்தப்படுத்தி இந்த கீழத்தரமான செய்தியை வெளியிட்டுள்ளார். அரசியலில் ஒருவரை, ஒருவர் தாக்கி கொள்வதற்கு அவர்களுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் உங்கள் அரசியல் பிரச்சினையில் தேவையில்லாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை, கீழ்த்தரமான அவதூறுகளை திரையுலக பெண்கள் மீது சுமத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.

நடிகர் மன்சூர் அலிகான்: சமத்துவம் படைத்த தமிழகத்தில் இப்படியான கீழ்த்தரமான பேச்சு கண்டிக்கத்தக்கது. சுயலாபத்துக்காகவா? எதற்காக இப்படி பேசினார் என்று தெரியவில்லை. சக திரைத்துறை நடிகர் குறித்து மோசமான முறையில் பேசியிருப்பது என் மனதை காயப்படுத்தியுள்ளது. இதுபோன்ற பேச்சுகள் ஆபத்தானவை, அருவருக்கத்தக்கவை. உரியவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இயக்குநர் சேரன்: வன்மையாகக் கண்டிக்கிறேன். எந்த ஆதாரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர் சங்கம் இதற்கு தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன்.

இயக்குநர் பேரரசு: அசிங்கவாதிகளாக சில அரசியல்வாதிகள். அவர்களின் பேச்சில் விஷயம் இருக்கிறதோ இல்லையோ விஷம் இருக்கிறது. ஏ.வி.ராஜூ என்பவர் த்ரிஷா அவர்களின் பெயரை குறிப்பிட்டு கூவத்தூர் கூத்தில் சம்பந்தப்படுத்தியது இதெல்லாம் அருவருக்க செயலாகும். ஒருவரைப் பற்றி மிகவும் கேவலமாக பேசி அவர்களையும், அவர்களை சார்ந்தவர்களையும் மன உளைச்சலுக்கு உண்டாக்கிவிட்டு பின் மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தையில் முற்றுப்புள்ளி வைப்பது சரியாகது. இந்த மாதிரியான அநாகரீக செயலுக்கு பாதிக்கபட்டவர்கள் புகார் கொடுத்துத்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில்லாமல், காவல்துறையே தானாக முன்வந்து இந்த மாதிரி நபர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் இப்படிப்பட்ட அசிங்க பேச்சுக்கள் அரங்கேறாமல் இருக்கும்.