காஷ்மீர் | மக்களுடன் கல்லி கிரிக்கெட் விளையாடிய சச்சின்!

குல்மார்க்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், காஷ்மீரின் குல்மார்க் பகுதி மக்களுடன் தெருவில் கல்லி கிரிக்கெட் விளையாடினார். அதன் மூலம் நெட்டிசன்களின் நெஞ்சங்களை அவர் வென்றுள்ளார்.

காஷ்மீருக்கு சுற்றுப்பயணமாக சச்சின் சென்றுள்ளார். தனது பயணம் குறித்த அப்டேட்டை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் குல்மார்க் மக்களுடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோவை பகிர்ந்துள்ளார். காரில் இருந்து இறங்கிய அவர், ‘நானும் விளையாட வருகிறேன்’ என சொல்லி மக்களுடன் இணைந்து கொண்டார். அதில் பல்வேறு ஷாட்களை ஆடிய சச்சின், கடைசி பந்தினை எதிர்கொண்ட போது பேட்டை தலைகீழாக பிடித்து ஆடினார்.

அந்த பந்தை பேட் மூலம் மிடில் செய்ய அதற்கு நெட்டிசன்கள் பலரும் ரியாக்ட் செய்து வருகின்றனர். தொடர்ந்து மக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

50 வயதான சச்சின், கடந்த 1989 முதல் 2013 வரையில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடி உள்ளார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 664 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் விளையாடி உள்ளார். அதன் மூலம் 34,357 ரன்கள் மற்றும் 201 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். இதில் 100 சதங்களை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.