வித்தைக்காரன் – விமர்சனம்: எடுபட்டதா சதீஷின் ‘சீரியஸ்’ முயற்சி?

ஏமாற்றுவது தவறல்ல, ஏமாற்றப்படுவதுதான் தவறு என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டவர் வெற்றி (சதீஷ்). மேஜிக் நிபுணரான இவர், நகரின் மிகப் பெரிய மாஃபியா தலைவர்களான கல்கண்டு ரவி (மதுசூதனன் ராவ்), மாரி கோல்ட் (சுப்ரமணிய சிவா), அழகு (ஆனந்தராஜ்) மூவரின் வாழ்க்கையிலும் குறுக்கிடுகிறார். மூவருக்கும் தனித்தனியே உதவும் வெற்றி, அவர்களுக்கு தெரியாமல் சில வேலைகளையும் செய்கிறார். அவர் அப்படி செய்வதற்கான காரணங்கள் என்ன, அவரது நோக்கம் நிறைவேறியதா என்பதே ‘வித்தைக்காரன்’ படத்தின் திரைக்கதை.

மக்களை ஏமாற்றும் வித்தைகள் தெரிந்த ஹீரோ என்பதுதான் படத்தின் ஒன்லைன். இதே பாணியில் தமிழில் பல படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தாலும், அவற்றையெல்லாம் விஞ்சும் வகையில் இதில் ஏதேனும் ஒரு காட்சியாவது இடம்பெற்றுள்ளதா என்றால், இல்லை என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது.

படத்தின் ஆரம்பவே படு அபத்தத்துடன் தொடங்குகிறது. மெட்ரோ ரயிலில் ஏறும் நாயகி (சிம்ரன் குப்தா), தொலைபேசியில் தன்னிடம் பேசிய குரல் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். ரயிலில் அமர்ந்திருக்கும் சிலரிடம் ஒவ்வொருவராக சென்று குரல்களை சரிபார்த்து ஒருவழியாக தன்னிடம் பேசிய குரலுக்கு சொந்தக்காரரை கண்டுபிடிக்கிறார். அந்த நபர் நாயகியிடம் ‘யு ஆர் அப்பாயின்ட்டட்’ என்று சிரித்தபடியே சொல்கிறார். இப்படி ‘புத்திசாலித்தனமாக’ செயல்பட்டவருக்கு ஏதேனும் உளவுத் துறையில் வேலை கிடைக்கப் போகிறது என்று நினைத்து ஆர்வத்துடன் பார்த்தால், அடுத்தக் காட்சியில் அவர் ஒரு பத்திரிகை நிறுவனத்தில் புலனாய்வு நிருபராக வேலை பார்த்துக் கொண்டிருப்பது ‘குபீர்’ தருணம்.

இதன் பிறகும், அபத்தங்கள் தொடர்ந்து அடுக்கடுக்காக வந்தபடியே இருந்தன. ஊரின் மிகப் பெரிய கேங்ஸ்டர்களாக இருக்கும் வில்லன்களிடம், அவர்களுக்கு அறிமுகமே இல்லாத நாயகன் அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று டீல் பேசுகிறார்; ப்ளாக்மெயில் செய்கிறார். கோடிகளில் புரளும் மாஃபியாக்களிடம் ஒரு சாதாரண ஆள் இப்படித்தான் சென்று டீல் பேசுவாரா? அப்படியான வில்லன்களையாவது கொஞ்சம் சீரியசான ஆட்களாக காட்டிருக்க வேண்டாமா?

நாயகன் இழுத்த இழுப்புக்கு எல்லாம் ஆடும் கோமாளி வில்லன்களாக சித்தரிக்கப்பட்டிருக்கும் பெரும் பலவீனம். நடுரோட்டில் வைத்து ஏடிஎம் பணத்தை கொள்ளை அடிக்கும் காட்சி எல்லாம் எந்தவித உழைப்பும் மேம்போக்காக இல்லாமல் எழுதப்பட்டிருக்கிறது.

ஆனந்தராஜை சதீஷ் முதன்முதலில் சந்திக்கும் காட்சி மட்டும் ரசிக்கும்படி இருந்தது. அதில் இடம்பெற்றிருந்த நகைச்சுவையும் நன்றாக எடுபட்டிருந்தது. ஆனால், இதே காம்போவை வைத்து இரண்டாம் பாதியில் வைக்கப்பட்ட காட்சிகள் எல்லாம் கைகொடுக்கவில்லை. தனது முன்னாள் காதலி குறித்து நாயகியிடம் சதீஷ் சொல்வது, விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகளை ஏமாற்றுவதாக வரும் காட்சிகள் எல்லாம் எந்தவித ஈர்ப்பையும் ஏற்படுத்தவில்லை.

இந்தப் படம் எந்த அளவுக்கு மெனக்கெடாமல் எடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம். ஒரு காட்சியில் தங்கத்தை திருடிக் கொண்டு ஆனந்தராஜின் ஆட்களோடு சதீஷ் காரில் வருவார். முந்தைய காட்சியில் போலீசிடம் இருந்த அந்த தங்கத்தை எடுக்கும்போது ஒரு கலர் சட்டையும், பின்னர் காரை விட்டு இறங்கும்போது வேறு ஒரு கலர் சட்டையும் போட்டிருக்கிறார். ஒருவேளை வரும் வழியிலேயே இறங்கி சட்டையை மாற்றிக் கொண்டாரா?

அதேபோல இன்னொரு காட்சியில் வில்லனின் ஆட்கள் வேகமாக வந்து போலீஸ் பேரிகாடை இடித்து விடுகிறார்கள். இதனால் அவர்களை காரிலிருந்து இறக்கி போலீசார் விசாரிக்கின்றனர். அந்தக் காட்சியில் அந்தக் காருக்கு பின்னால் ஒரு பெரிய மதில் சுவர் இருக்கிறது. அப்படியென்றால் அந்த கார் எங்கிருந்து படுவேகத்தில் வந்து மோதியது?

இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களைக் கூடவா எடிட்டிங் வரை கவனிக்காமல் விட்டிருப்பார்கள்? படத்தில் மேஜிக் நிபுணராக வருகிறார் சதீஷ். ஆனால் அது அறிமுகப் பாடல் தவிர படத்தில் எந்த இடத்தில் பயன்பட்டது?

நாயகனாக சதீஷ் கேஷுவலாக நடிக்க முயன்றிருக்கிறார். சில இடங்களில் அது கைகொடுத்தாலும், எமோஷனல் காட்சிகளில் ஸ்கோர் செய்ய தவறுகிறார். வழக்கமான காமெடி கலந்த வில்லத்தனத்துடன் ஆனந்தராஜ் ஈர்க்கிறார். ஒரு காட்சியே வரும் ஜான் விஜய்யும் கவர்கிறார். மற்றவர்களின் நடிப்பில் குறிப்பிட்டு சொல்லும்படி ஒன்றும் இல்லை.

ஒரு ஹெய்ஸ்ட் த்ரில்லர் படத்துக்கு தேவையான உழைப்பு யுவா கார்த்திக்கின் ஒளிப்பதிவில் தெரிகிறது. விபிஆரின் பின்னணி இசை ஓகே ரகம். பாடல்கள் கவரவில்லை. முதல் பாதியில் நான்லீனியராக சொல்லப்படும் காட்சிகளில் குழப்பமே மிஞ்சுகிறது. எடிட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

படத்தை ஒரு ஹெய்ஸ்ட் த்ரில்லராக எடுப்பது என்று முடிவு செய்தபிறகு, அதற்கான ஓரிரு புத்திசாலித்தனமான காட்சிகளை அமைத்திருந்தாலே படம் ஓரளவு தப்பியிருக்கும். ஆனால், சீரியஸாக தொடங்கி, பின்னர் காமெடி என்று வழிமாறி, மீண்டும் சீரியஸ் மோடுக்கு வந்து, கடைசியில் ட்விஸ்ட் என்று ஒன்றை வைத்து ஒருவழியாக படத்தை முடிக்கும்போது சலிப்பே மிஞ்சுகிறது.

'+divToPrint.innerHTML+'