ராஞ்சி டெஸ்ட் | அஸ்வினின் அதிக முறை 5 விக்கெட் சாதனை: இந்திய அணி வெற்றிக்கு 192 ரன்கள் இலக்கு

ராஞ்சி: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 30 ரன்களுடனும், குல்திப் யாதவ் 17 ரன்களுடனும் 3ம் நாள் ஆட்டத்தை இன்று (ஞாயிறு) தொடங்கினர். இருவரும் விக்கெட் விழாத வண்ணம் நிதானமாக விளையாடினர். இங்கிலாந்தின் பந்துவீச்சு தாக்குதலை திறம்பட கையாண்டனர். துருவ் ஜூரெல் அரைசதம் கடந்தார். குல்திப் யாதவ் 131 பந்துகளைச் சந்தித்து 2 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்து ஜூரெலுக்கு பக்கபலமாக இருந்தார்.

ஆனால், ஆண்டர்சனின் பந்துவீச்சில் எதிர்பாரதவிதமாக போல்டானார். இக்கூட்டணி 80 ரன்கள் வரை சேர்த்து இந்திய அணியை பரிதாபகரமான நிலையில் இருந்து மீட்டது. இதேபோல் ஆகாஷ் தீப் தன் பங்குக்கு 29 பந்துகளை சந்தித்து 9 ரன்கள் எடுத்து பொறுமை காத்து ஆட்டமிழந்தார். மறுபக்கம், துருவ் ஜூரெல் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால், 149 பந்துகளுக்கு 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என விளையாடி 90 ரன்கள் எடுத்திருந்த போது டாம் ஹார்ட்லியின் அசாத்திய பந்துவீச்சில் போல்டாகி விக்கெட்டை இழந்தார்.

துருவ் ஜூரெலின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது இந்திய அணி. இதன்மூலம் இங்கிலாந்தை விட 46 ரன்கள் பின்னிலையில் உள்ளது இந்தியா. இங்கிலாந்து தரப்பில் சோயப் பஷீர் 5 விக்கெட், டாம் ஹார்ட்லி 3 விக்கெட், ஆண்டர்சன் 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் இந்தியாவின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சுருண்டனர். தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 60 ரன்கள் அடித்தார். பேர்ஸ்டோவ் 30 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணி சார்பில் அஸ்வின் 5 விக்கெட், குல்தீப் யாதவ் 4 விக்கெட், ஜடேஜா 1 விக்கெட் கைப்பற்றினர். இதனால் இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பில்லாமல் 40 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் 24 ரன்கள், ஜெய்ஸ்வால் 16 ரன்கள் எடுத்துள்ளனர். இன்னும் 152 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறுவதோடு டெஸ்ட் தொடரையும் இந்திய அணி கைப்பற்றும்.

அஸ்வின் சாதனை: இந்த டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார் ரவிசந்திரன் அஸ்வின். இப்போட்டியின் மூலம் இந்திய மண்ணில் 354* டெஸ்ட் விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளனர். அதேபோல், அதிக முறை 5 விக்கெட்கள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையையும் சமன் செய்தார் அஸ்வின்.