திரை விமர்சனம்: வித்தைக்காரன்

தங்கக் கடத்தலில் ஈடுபடும் கோல்டு மாரி (சுப்ரமணிய சிவா), கள்ளப் பணத்தை மாற்றித் தரும் அழகு (ஆனந்த்ராஜ்), வைரக் கடத்தலில் ஈடுபடும் கல்கண்டுரவி (மதுசூதனன் ராவ்) ஆகியோரின் நம்பிக்கையைப் பெற்று அவர்களுடன் மேஜிக் கலைஞரான வெற்றி (சதீஷ்) இணைகிறார். மூவருக்கும் தனித்தனியாக உதவும் வெற்றி, அவர்களுக்குத் தெரியாமல் சில வேலைகளையும் செய்து வருகிறார். ஒரு கட்டத்தில் விமான நிலையத்தில் சிக்கியிருக்கும் வைரத்தை கடத்த மூன்று குழுவும் செல்கிறது. வைரங்கள் யாருக்குக் கிடைத்தன? வெற்றி இவர்களுடன் இணைந்ததன் நோக்கம் என்ன? அது நிறைவேறியதா? என்பது மீதிக் கதை.

கள்ளக் கடத்தலை மையமாக வைத்து நகைச்சுவை கலந்த த்ரில்லரைக் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் வெங்கி. படத்தில் வாய்விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகள் இருக்கின்றன. கடத்தல் தொடர்பான பகுதிகளிலும் சுவாரசியமான காட்சிகள் உள்ளன. ஆனால் ஒட்டுமொத்த திரைக்கதையைக் கரையேற்ற இவை இரண்டும் போதவில்லை.

முதல் பாதியில் வெற்றியின் செயல்கள் அனைத்தும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. இந்தக்குழப்பம் விலக படத்தின் இறுதிக் காட்சி வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது. அவ்வளவு நேரம் காக்க வைத்து இறுதியில் உண்மைகளைச் சொல்லும்போது எந்த ஆச்சரியமும் ஏற்படவில்லை. ஏனென்றால் அதற்கு முன்பே படம் முடிந்தால் போதும்என்னும் மனநிலையை விதைத்துவிடுகிறது திரைக்கதை.

இரண்டாம் பாதியில் வரும் விமான நிலையக் காட்சிகளில் மூன்றுகொள்ளைக் கூட்டங்களையும் ஒன்றுகூட வைத்து நிகழ்த்தப்படும் நாடகம் ஆங்காங்கே சிரிக்கவும் சில இடங்களில் விறுவிறுப்பையும் கொடுக்கின்றன. ஆனாலும் இந்தப் பகுதியில் தலைதூக்கும் தர்க்கப்பிழைகளை குறைத்து இன்னும் சுவாரசியமாக்கி இருக்கலாம்.

நாயகனாக மாறியிருக்கும் சதீஷ், கதாபாத்திரத்துக்குப் பொருந்தினாலும் அவருக்குக் கொடுக்கப்படும் நாயக பில்டப்புகள் துளியும் எடுபடவில்லை. புலனாய்வு பத்திரிகையாளராக அசத்தலான காட்சியுடன் அறிமுகமாகும் சிம்ரன் குப்தா, அதற்குப் பிறகு வெறுமனே வந்துபோகிறார். ஆனந்த்ராஜின் நகைச்சுவை-வில்லன் நடிப்பு இதில் கைகொடுக்கவில்லை. சுப்ரமணிய சிவா, ஜி.மாரிமுத்து, மதுசூதன் ராவ், பாவல் நவகீதன் என தெரிந்த முகங்கள் நிறைய இருந்தாலும் யாரும் தாக்கத்தைச் செலுத்தவில்லை. சாம்ஸ், லீ கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ஆகிய இருவர் மட்டும் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

விபிஆரின் பின்னணி இசை வழக்கமானதாக உள்ளது. இளங்கோசித்தார்த் எடிட்டிங்கில் சில ஜாலங்களைக் காட்ட முயற்சித்திருந்தாலும் அது திரைக்கதையில் உள்ள குழப்பத்தை ஈடுகட்டப் பயனளிக்கவில்லை. யுவ கார்த்திக்கின் ஒளிப்பதிவு மட்டுமே தொழில்நுட்பரீதியில் படத்தை தூக்கிப் பிடிக்க முயன்றிருக்கிறது.

கொஞ்சம் நகைச்சுவையும், கொஞ்சம் விறுவிறுப்பும் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக ஏமாற்றத்தையே தருகிறான் இந்த ‘வித்தைக்காரன்’.

'+divToPrint.innerHTML+'