’ஆர்டிக்கிள் 370’ படத்துக்கு வளைகுடா நாடுகளில் தடை

சென்னை: யாமி கவுதம், பிரியாமணி நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஆர்டிக்கிள் 370’ படத்துக்கு வளைகுடா நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆதித்யா ஜம்பாலே இயக்கத்தில் யாமி கவுதம், பிரியாமணி நடித்துள்ள ‘ஆர்டிக்கிள் 370’ படம் கடந்த 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது குறித்து பேசும் இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. வசூல்ரீதியாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இப்படம் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், ‘ஆர்டிக்கிள் 370’ படத்துக்கு வளைகுடா நாடுகளில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்சாரில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த ஜனவரியில் வெளியான ஹ்ரித்திக் ரோஷனின் ‘ஃபைட்டர்’ திரைப்படமும் இதே காரணங்கள் சொல்லி வளைகுடா நாடுகளில் தடை விதிக்கப்பட்டது. இந்திய மக்கள் அதிகமாக வசிக்கும் வளைகுடா நாடுகளில் தொடர்ந்து இந்தியப் படங்களுக்கு தடை விதிக்கப்படுவது இந்தி திரைத்துறையினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படம் வெளியாவதற்கு முன்பு ஜம்மு-காஷ்மீரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மக்கள் உண்மையான தகவல்களை தெரிந்துகொள்ள இப்படம் உதவும்” என்று பாராட்டியிருந்தார்.