புதுக்கோட்டை: குளமங்கலம் அய்யனார் கோயில் மாசித் திருவிழாவையொட்டி, வில்லுனி ஆற்றில் விடிய விடிய கடந்த 2 நாட்களாக நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளைக் காண குடும்பத்துடன் பல்லாயிரக் கணக்கானோர் திரண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் பெருங்காரையடி மீண்டஅய்யனார் கோயிலில் ஆசிய அளவில் பிரசித்தி பெற்ற அதிகஉயரம் உள்ள குதிரை சிலை உள்ளது. வில்லுனி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசி மகத்தையொட்டி, 2 நாட்கள் இரவு பகலாக திருவிழா நடைபெறும். அதன்படி, நேற்றும் நேற்று முன்தினமும் குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயிலில் மாசிமகத் திருவிழா நடைபெற்றது. திருவிழாவையொட்டி, பல்வேறு ஊர்களில் இருந்து கோயிலுக்கு அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இரு நாட்களிலும் இரவில் விடிய விடிய வில்லுனி ஆற்றில் நடனம், நாட்டியம், இசை நிகழ்ச்சிகள் என ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், பொழுது போக்குவதற்காக சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சர்க்கஸ், ராட்டினம் சுற்றுதல், படகு சவாரி, ரயில் வண்டி, பைக் ஓட்டுதல் உள்ளிட்ட ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. மாசி மகத் திருவிழாவில் வழிபாடு நடத்தவும், கலை நிகழ்ச்சிகளை காணவும் பொழுது போக்கு அம்சங்களில் விளையாடவும் பல்லாயிரக் கணக்கானோர் குடும்பத்துடன் வில்லுனி ஆற்றில் திரண்டனர்.
இது குறித்து குளமங்கலத்தைச் சேர்ந் திருவிழா ஏற்பாட்டாளர்கள் கூறியது: குளமங்கலம் அய்யனார் கோயில் திருவிழா 2 நாட்கள் நடைபெறும். இரு நாட்களுமே ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவர். குதிரை சிலைக்கு காகித மாலைகள் அணிவிக்கப்படுவது வேறு எங்கும் இல்லாத சிறப்பு. கூடுதலாக, மாவட்டத்தில் வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத அளவுக்கு இரவில் ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையில் பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்திருப்பது இங்குதான். நிகழாண்டு கும்பாபிஷேக விழாவுக்கான பணிகள் நடைபெற்று வருவதால், மாசி மகத் திருவிழாவுக்கு வரும் மக்கள் கூட்டம் குறையலாம் என எதிர்பார்த்தோம்.ஆனால், முந்தைய ஆண்டுகளை விட அதிகமாக லட்சம் பேர் திரண்டிருப்பார்கள் என்றனர்.