சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் விளாசி நமீபியா வீரர் சாதனை!

கீர்த்திபூர்: சர்வதேச டி20 கிரிக்கெட் அதிவேக சதம் விளாசி அசத்தியுள்ளார் நமீபியா நாட்டு கிரிக்கெட் வீரர் ஜேன் நிகோல் லோஃப்டி-ஈடன். 33 பந்துகளில் அவர் சதம் பதிவு செய்து இந்த சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம் குஷன் மல்லாவின் 34 பந்துகள் சாதனையை முறியடித்துள்ளார்.

நேபாள நாட்டில் நேபாளம், நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு சர்வதேச டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த மூன்று அணிகளும் வரும் ஜூன் மாதம் அமெரிக்காவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட உள்ளன. இந்த சூழலில் இந்த தொடர் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் 2 முறை பலப்பரீட்சை செய்யும். அதிக வெற்றிகளை பதிவு செய்யும் முதல் இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும்.

இந்த தொடரின் முதல் போட்டி நமீபியா மற்றும் நேபாளம் இடையில் செவ்வாய்க்கிழமை (பிப்.27) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பேட் செய்து 206 ரன்கள் எடுத்தது. 10.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்திருந்த சூழலில் பேட் செய்ய வந்தார் ஜேன் நிகோல் லோஃப்டி-ஈடன். தொடக்க முதலே அதிரடியாக ஆடி ரன் குவித்தார். மலான் உடன் இணைந்து 135 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 33 பந்துகளில் சதம் கடந்து சாதனை படைத்தார். தனது இன்னிங்ஸில் 11 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார்.

22 வயதான அவர் இடது கை பேட்ஸ்மேன். 33 சர்வதேச டி20 மற்றும் 36 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். இது தான் அவர் பதிவு செய்துள்ள முதல் சதம் ஆகும். இந்தப் போட்டியில் 2 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். அதன் மூலம் ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றுள்ளார். இந்தப் போட்டியில் நேபாள அணி 20 ரன்களில் தோல்வியை தழுவியது.