வெலிங்டன்: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக 37 வயதான நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் அறிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் பிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான நீல் வாக்னர், நியூஸிலாந்து அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 260 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூஸிலாந்து அணிக்காக அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளார்.
நியூஸிலாந்து அணியானது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதஉள்ளது. இதன் முதல் ஆட்டம்நாளை (29-ம் தேதி) வெலிங்டனில் தொடங்குகிறது. இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியின் விளையாடும் லெவனில் நீல் வாக்னர் இடம் பெறுவது சந்தேகம் என்றே கருதப்படுகிறது. இந்நிலையில்தான் சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நீல் வாக்னர் அறிவித்துள்ளார்.
நியூஸிலாந்து அணிக்காக கடந்த 2012-ம் ஆண்டு நீல் வாக்னர் அறிமுகமானார். 2022-ம்ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட்சாம்பியன்ஷிப்பில் நியூஸிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றதில் நீல் வாக்னர் முக்கிய பங்குவகித்தார். 2008-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் இருந்துநியூஸிலாந்துக்கு குடிபெயர்ந்த நீல் வாக்னர், ஒடாகோ மாகாணத்துடன் முதல் தர கிரிக்கெட்டில் தன்னை விரைவாக நிலைநிறுத்திக் கொண்டார்.
சமீபத்திய ஆண்டுகளில், நீல் வாக்னர் தொடர்ச்சியாக ஷார்ட்-பிட்ச் பந்துவீச்சை ஆயுதமாக பயன்படுத்தினார். இது அணிக்கு சிறந்த பலன்களை கொடுத்தது. அவர், விளையாடிய 64 டெஸ்ட் போட்டிகளில் 34 போட்டிகளில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
நீல் வாக்னரின் மிகவும் குறிப்பிடத்தக்க செயல்திறன்களில் ஒன்று, கடந்த ஆண்டு பேசின்ரிசர்வ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஃபாலோ ஆன் பெற்ற நியூஸிலாந்து அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்ததை கூறலாம். அந்தஆட்டத்தில் வெற்றியின் விளிம்பில் இங்கிலாந்து அணி இருந்தநிலையில் கடைசி விக்கெட்டாக ஜேம்ஸ் ஆண்டர்சனை ஆட்டம்இழக்கச் செய்து வெற்றியை நியூஸிலாந்து அணியின் பக்கம் திருப்பியிருந்தார் நீல் வாக்னர். அந்த ஆட்டத்தில் வாக்னர் 4 விக்கெட்களை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்திருந்தார்.
ஓய்வு முடிவை அறிவித்த நீல் வாக்னர் கூறும்போது, “இது உணர்ச்சிகரமான வாரம். கிரிக்கெட் எனக்கு அதிகம் கொடுத்துள்ளது. இவ்வளவு கொடுத்த மற்றும் நிறைய பெற்ற ஒன்றிலிருந்து விலகிச் செல்வது எளிதல்ல, ஆனால் மற்ற வீரர்கள் முன்னேறி இந்தஅணியை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டிய நேரம் இது.
நியூஸிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய ஒவ்வொரு தருணத்தையும் நான் அனுபவித்தேன், ஒரு அணியாக எங்களால் சாதிக்க முடிந்த அனைத்தையும் நினைத்து பெருமைப்படுகிறேன்” என்றார்.