திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபாடு

நாமக்கல்: மாசி குண்டம் திருவிழாவை முன்னிட்டு, திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தி, அம்மனை வழிபட்டனர்.

இதையொட்டி, கடந்த 16-ம் தேதி அம்மனுக்குப் பூச்சாட்டுதலுடன் குண்டம் திருவிழா தொடங்கியது. இதையடுத்து, தினசரி அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தன. மேலும், பக்தர்கள் அக்னி சட்டி மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாகக் கோயிலுக்கு வந்து அம்மனை வழிபட்டனர். திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குண்டம் இறங்க காப்புக் கட்டி, விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று அதிகாலை முதல் குண்டம் இறங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

தொடர்ந்து, 60 அடி நீளமுள்ள குண்டத்தில் கோயில் பூசாரி கும்பத்துடன் முதலில் குண்டம் இறங்கி, குண்டம் இறங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என ஆயிரக் கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர். பல பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்குப் படைத்து வழிபட்டனர். இதையொட்டி, சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருச்செங்கோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், சேலம், கரூர், ஈரோடு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மார்ச் 2-ம் தேதி அம்மன் திருவீதி உலாவுடன் திருவிழா நிறைவு பெற உள்ளது. திருவிழாவையொட்டி, நகரில் வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும், டிஎஸ்பி இமயவரம்பன் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.