மும்பை: “இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கான வீரர்களின் ஆண்டு ஒப்பந்தத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு மட்டும் ஏன் விலக்கு” என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) முன்னாள் வீரர் இர்பான் பதான் கேள்வி எழுப்பி உள்ளார்.
அண்மையில் வீரர்களின் ஆண்டு ஒப்பந்தத்தை பிசிசிஐ வெளியிட்டது. இதில் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் பெயர் இடம்பெறவில்லை. உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மறுத்த காரணத்தால் அவர்களது பெயர் பரிசீலிக்கப்படவில்லை என சொல்லப்பட்டது. இதனை பலரும் வரவேற்றனர். அதே நேரத்தில் ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள மற்ற வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி.
இந்த சூழலில் பதான் கேள்வி எழுப்பியுள்ளார். “ஸ்ரேயஸ் மற்றும் இஷான் என இருவரும் அபார திறன் படைத்த வீரர்கள். நிச்சயம் அவர்கள் இதிலிருந்து மீண்டு எழுவார்கள். ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் விளையாட மறுத்தால் உள்ளூர் அளவில் நடைபெறும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அவர்கள் விளையாட வேண்டும். தேசிய அணிக்காக விளையாடாத போது இதை செய்யலாம். உள்ளூர் கிரிக்கெட்டில் வீரர்கள் விளையாட வேண்டுமென்ற விதி அனைவருக்கும் பொருந்த வேண்டும். அது இந்திய கிரிக்கெட்டுக்கு நலன் சேர்க்கும்” என பதான் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாண்டியா விளையாடிய நிலையில், காயம் காரணமாக தொடரில் இருந்து பாதியில் விலகி இருந்தார். அதன் பிறகு இதுவரையில் அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. எதிர்வரும் ஐபிஎல் சீசனில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்த உள்ளார்.