சென்னை: சர்வதேச கிரிக்கெட் களத்தில் பல மறக்க முடியாத தருணங்களை தன் வசம் வைத்துள்ளவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர். கடந்த 2003-ல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி இன்னிங்ஸ் ஆடி அசத்தி இருந்தார்.
அந்த வருடம் மார்ச் 1-ம் தேதியன்று செஞ்சுரியன் பார்க்கில் இந்த போட்டி நடைபெற்றது. தொடரின் முதல் சுற்று போட்டி இது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்தது. சயீத் அன்வர், 101 ரன்கள் பதிவு செய்து இருந்தார். 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது.
வேகப்பந்து வீச்சாளர்களின் சொர்க்கபுரியான தென் ஆப்பிரிக்க ஆடுகளத்தில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர் என அசத்தல் பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தானின் ஆடும் லெவனில் அங்கம் வகித்தனர். சச்சினும், சேவாக்கும் இந்திய அணிக்காக தொடக்க வீரர்களாக களம் கண்டனர். தொடக்கம் முதல் ஆட்டத்தில் அதிரடி காட்டினார் சச்சின். 37 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார்.
சேவாக் உடன் 50 ரன்கள் மற்றும் முகமது கைஃப் உடன் சேர்ந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 75 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 12 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் இதில் அடங்கும். சச்சின் ஆட்டமிழந்த பிறகு ராகுல் திராவிட் மற்றும் யுவராஜ் சிங் இணைந்து அணியை வெற்றி பெற செய்தனர். யுவராஜ், அரைசதம் பதிவு செய்தார். 45.4 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது இந்தியா.
இந்த தொடரில் 11 இன்னிங்ஸ் ஆடிய சச்சின், 673 ரன்கள் குவித்தார். 1 சதம் மற்றும் 6 அரைசதங்கள் இதில் அடங்கும். அதன் மூலம் தொடர் நாயகன் விருதை வென்றிருந்தார். இந்த தொடரில் இந்தியா இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தது.