NZ vs AUS | வெலிங்டன் டெஸ்ட் போட்டி நியூஸிலாந்து அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

வெலிங்டன்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கேமரூன் கிரீனின் அதிரடியால் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 383 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி 179 ரன்களுக்கு சுருண்டது.

வெலிங்டனில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தில் 85 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 279 ரன்கள் சேர்த்தது. ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீன் 103, ஜோஷ் ஹேசில்வுட் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து விளையாடியது. ஜோஷ் ஹேசில்வுட் நிதானமாக பேட் செய்ய கேமரூன் கிரீன் மட்டையை சுழற்றினார்.

கடைசி விக்கெட்டுக்கு 116 ரன்கள் குவித்த பிறகே இந்த ஜோடியை நியூஸிலாந்து அணியால் பிரிக்க முடிந்தது. ஜோஷ் ஹேசில்வுட் 62 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த நிலையில் மேட் ஹென்றி பந்தில் ஆட்டமிழந்தார். முடிவில் ஆஸ்திரேலிய அணி 115.1 ஓவர்களில் 383 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. கேமரூன் கிரீன் 275 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 23 பவுண்டரிகளுடன் 174 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நியூஸிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்களையும் வில்லியம் ஓ’ரூர்க், ஸ்காட் குகேலின்ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணியானது 29 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. டாம் லேதம் 5, வில் யங் 9, கேன் வில்லியம்சன் 0, ரச்சின் ரவீந்திரா 0, டேரில் மிட்செல் 11 ரன்களில் நடையை கட்டினர். இதன் பின்னர் கிளென் பிலிப்ஸுடன் இணைந்து டாம் பிளண்டெல் பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க முயன்றார்.

84 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை நேதன் லயன் பிரித்தார். டாம் பிளண்டடெல் 33 ரன்களில் நேதன் லயன் பந்தில் வெளியேறினார். தொடர்ந்து ஸ்காட் குகேலின் ரன் ஏதும் எடுக்காத நிலையில் நேதன் லயன் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து களமிறங்கிய மேட் ஹென்றி அதிரடியாக விளையாடினார். மறுமுனையில் சீராக ரன்கள் சேர்த்த கிளென் பிலிப்ஸ் தனது 3-வது அரை சதத்தை கடந்தார்.

சிறப்பாக பேட் செய்த கிளென்பிலிப்ஸ் 70 பந்துகளில், 13 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் சேர்த்த நிலையில் ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து கேப்டன் டிம் சவுதி ஒரு ரன்னில் நேதன் லயன் பந்தில் வெளியேறினார். மட்டையை சுழற்றிய மேட் ஹென்றி 34 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 42 ரன்ள் எடுத்த நிலையில் நேதன் லயன் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். முடிவில் நியூஸிலாந்து அணி 43.1 ஓவர்களில் 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து பாலோ ஆன் ஆனது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் நேதன் லயன் 4 விக்கெட்களையும், ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

நியூஸிலாந்து அணிக்கு பாலோ ஆன் கொடுக்காமல் 204 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸில் தொடர்ந்து பேட் செய்தது ஆஸ்திரேலிய அணி. 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் அந்த அணி 8 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 13 ரன்கள் எடுத்தது. ஸ்டீவ் ஸ்மித் 0, மார்னஷ் லபுஷேன் 5 ரன்களில் டிம் சவுதி பந்தில் ஆட்டமிழந்தனர். உஸ்மான் கவாஜா 5, நேதன் லயன் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர். கைவசம் 8 விக்கெட்கள் இருக்க 217 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.