ரஞ்சி கோப்பை கிரிக்கெட் | தமிழக அணி 146 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

மும்பை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த தமிழக அணி 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

மும்பை பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்தஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்ததமிழக அணி 42 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தவித்தது. சாய் சுதர்சன் 0, நாராயண் ஜெகதீசன் 4, பிரதோஷ் ரஞ்ஜன் பால் 8, கேப்டன் சாய் கிஷோர் 1, பாபா இந்திரஜித் 11 ரன்களில் நடையை கட்டினர். இதன் பின்னர் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கருடன் இணைந்து நிதானமாக விளையாடினார்.

48 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை ஷர்துல் தாக்குர் பிரித்தார். விஜய் சங்கர் 109 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்த நிலையில் ஷர்துல் தாக்குர்பந்தில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து முகமது 17, அஜித் ராம் 15, சந்தீப் வாரியர் 0 ரன்களில் வெளியேறினர். நிதானமாக விளையாடி வந்த வாஷிங்டன் சுந்தர் 138 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்த நிலையில் தனுஷ் கோட்டியன் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

முடிவில் தமிழக அணி 64.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மும்பை அணி தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்களையும் ஷர்துல் தாக்குர், முஷீர் கான், தனுஷ் கோட்டியன் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதையடுத்து விளையாடிய மும்பை அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 17 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்தது. பிரித்வி ஷா 5 ரன்னில் குல்தீப் சென் பந்திலும், பூபென் லால்வானி 15 ரன்னில் சாய் கிஷோர் பந்திலும் ஆட்டமிழந்தனர்.

முஷீர் கான் 24, மோஹித் அவஷ்தி ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 101 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்றைய 2-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது மும்பை அணி.