சென்னை: சென்னை தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பத்மாவதி தாயார் கோயிலில் 9 நாள் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு கடந்த மாதம், 27-ம் தேதி குங்கும அர்ச்சனை நடந்தது.
பிரம்மோற்சவ தொடக்க நாளான கடந்த மாதம் 28-ம் தேதி துவஜாரோஹணம் எனும் கொடியேற்ற வைபவம் நடந்தது. நேற்று காலை பல்லக்கு உற்சவ புறப்பாடு நடந்தது. மதியம் ஸ்நபன திருமஞ்சனமும், மாலை 5 மணிக்கு ஊஞ்சல் சேவையும் அதைத் தொடர்ந்து கர்நாடக இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
இரவு 7 மணிக்கு பத்மாவதி தாயார் கஜ வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து மீண்டும் கோயிலை வந்தடைந்தார்.
ஒவ்வொரு தெரு முனையிலும் வாகனம் நிற்கும்போது பக்தர்கள்ஆரத்தி தட்டுடன் வந்து தீபாராதனை செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த வைபவத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். கஜ வாகன புறப்பாட்டை முன்னிட்டு பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழக, புதுச்சேரி ஆலோசனைக் குழு தலைவர் சேகர் ரெட்டி ஏற்பாடு செய்திருந்தார்.
இன்று காலை சர்வ பூபால வாகன புறப்பாடும், மாலை கருட வாகன சேவையும் நடக்கிறது. 6-ம் தேதி ரத உற்சவமும், 7-ம் தேதி சக்ர ஸ்நானமும் நடக்க உள்ளது.