பொள்ளாச்சி மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா – பக்தர்கள் நேர்த்திக்கடன்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவையொட்டி, அலகு குத்தியும், பூவோடு எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா, கடந்த மாதம் 13-ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 19-ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தினசரி வேப்பிலை, மஞ்சள் கலந்த புனித நீரை எடுத்து வந்து கம்பத்தில் ஊற்றி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் பூவோடு எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பொள்ளாச்சியை சேர்ந்த பக்தர் ஒருவர், தனது உடலில் அலகு குத்தி, 51 பூவோடுகள் எடுத்துக் கொண்டு நேர்த்திக் கடன் செலுத்தினார்.

தொடர்ந்து கொடி கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை ஏபிடி பூவோடு நிகழ்ச்சி நடந்தது. வரும் 6-ம் தேதி காலை 6 மணிக்கு மா விளக்கு, காலை 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு 7 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. வரும் 7 -ம் தேதி இரண்டாம் நாள் தேரோட்டம், 8-ம் தேதி மூன்றாம் நாள் தேரோட்டம், தேர் நிலைக்கு வருதல், பரிவேட்டை, தெப்பத்தேர் உற்சவம் நடைபெற உள்ளது.

வரும் 9-ம் தேதி காலை 8.30 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், கம்பம் எடுத்தல் நிகழ்ச்சியும், 11-ம் தேதி மகா அபிஷேகமும் நடைபெற உள்ளது. பொள்ளாச்சி நீர் நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் தெப்பக்குளம் அருகே பூவோடுகளை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.