சென்னை: ஐபிஎல் 2024 தொடர் தொடங்குவதற்கு முன்னதாக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. அந்த அணியின் நியூஸிலாந்து அதிரடி வீரர் டெவன் கான்வே காயம் காரணமாக சீசனின் முதல் பாதி ஆட்டங்களை தவற விடலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
டெவன் கான்வே சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் போது இடது கட்டை விரலில் காயமடைந்தார். இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்து குறைந்தது 8 வாரங்களாவது அவருக்கு ஓய்வு தேவை என்று நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நியூஸிலாந்து வாரியம் தன் சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்த தகவல்: “ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 சர்வதேச தொடரின் போது தொடக்க ஆட்டக்காரர் டெவன் கான்வேயின் இடது கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து இந்த வாரம் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. பல ஸ்கேன்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைத் தொடர்ந்து, குறைந்தபட்சம் எட்டு வாரங்கள் மீட்புக் காலம் தேவைப்படும்” என்று பதிவிட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகள் மார்ச் 22ம் தேதி தொடங்குகின்றன. 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே இதுவரை வெளியாகியுள்ளது. நாட்டில் பொதுத்தேர்தல் நடைபெறவிருப்பதால் அதன் தேதிகளைப் பொறுத்து மீதிப்போட்டிகளுக்கான அட்டவணை அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
2022 ஏலத்தில் அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு கான்வேயை சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியது. இடது கை பேட்டர் ஐபிஎல்லில் 23 போட்டிகளில் 46.12 சராசரியுடன் 141. 28 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 924 ரன்கள் குவித்துள்ளார்.
ஆகவே, டெவன் கான்வே இப்போது சிஎஸ்கேவுக்கு இல்லாதது பெரிய பின்னடைவே. சென்னை அணிக்கு அவர் ஒரு முக்கியப் பங்களிப்பாளர். டுபிளெசிஸ் போன பிறகே டெவன் கான்வே அந்த இடத்திற்கு மிகப் பொருத்தமாக இருந்தார்.
சென்னை சேப்பாக்கத்தில் மார்ச் 22-ம் தேதி தொடங்கும் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியும் ஆர்சிபி அணியும் மோதுகின்றன. டெவன் கான்வேவுக்கு பதில் சிஎஸ்கே மாற்று வீரரை இதுவரை அறிவிக்கவில்லை.