சவுந்தர்யா இயக்கத்தில் கங்குலி பயோபிக்? – கேமியோ ரோலில் ரஜினி நடிப்பதாக தகவல்

சென்னை: முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாகவும் இதனை சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் ரஜினிகாந்த் ஒரு கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்தை, பிரபல இந்தி தயாரிப்பாளரும் இயக்குநருமான சஜித் நாடியத்வாலா அண்மையில் சென்னையில் சந்தித்தார். அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இருவரும் புதிய படத்தில் இணையப் போவதாகவும் அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், சஜித் நாடியத்வாலா தயாரிப்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாகவும் இதனை சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் தொடர்பாக பேசுவதற்காகவே சஜித் சென்னையில் ரஜினியை சந்தித்தாகவும் கூறப்படுகிறது. இதில் ஹீரோவாக நடிக்க பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இதில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் தற்போது ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். இதை,‘ஜெய் பீம்’ ஞானவேல் இயக்குகிறார். இதில் ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இப்போது ஆந்திராவில் நடந்து வருகிறது.

இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மே மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.