ராஞ்சி: எதிர்வரும் ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, புதிய ரோலில் களம் காண உள்ளதாக அவரே ஃபேஸ்புக் பதிவு மூலம் சூசகமாக தெரிவித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் ‘அது என்னவாக இருக்கும்?’ என்ற எதிர்பார்ப்பை அந்த பதிவு ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தோனி என இரண்டையும் பிரிக்கவே முடியாது. அது உடலும், உயிரும் போல. சென்னை அணியின் ரசிகர்கள் ஒவ்வொரு சீசனிலும் ‘அன்புடன்’ வெற்றி, தோல்வி என எதுவும் பார்க்காமல் அணியை தலையில் வைத்து கொண்டாடவும் அதுவே காரணம். தோனி, தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து முறை ஐபிஎல் அரங்கில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
கடந்த 2019 உலகக் கோப்பை அரையிறுதி போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் தோனி. அதன் பிறகு தோனி விளையாடும் ஒவ்வொரு ஐபிஎல் சீசனின் போதும் ‘இது அவரது கடைசி ஐபிஎல் சீசனாக இருக்குமா?’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அவரிடம் கேட்டபோது ‘Definitely Not’ என உறுதியாக மறுத்து வருகிறார்.
சென்னை மட்டுமல்லாது கடந்த சீசனில் அவர் பங்கேற்று விளையாடிய ஒவ்வொரு மைதானத்திலும் சிஎஸ்கே-வுக்கு ஆதரவாக விசில் சத்தம் அதிகம் பறந்தது. சென்னையில்தான் தனது கடைசி கிரிக்கெட் போட்டி இருக்கும் என தோனி ஒருமுறை சொல்லி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தான் அந்த பதிவை தோனி பகிர்ந்துள்ளார்.
“புதிய சீசன் மற்றும் புதிய ரோலை ஏற்க காத்திருக்க முடியவில்லை. கொஞ்சம் பொறுத்திருக்கவும்” என தோனி அந்த பதிவில் தெரிவித்துள்ளார். அதை வைத்து ரசிகர்கள், வல்லுநர்கள் என பலரும் பல்வேறு கூற்றினை முன்வைத்து வருகின்றனர். ‘கேப்டன் பொறுப்பை துறக்க உள்ளாரா?’, ‘இம்பேக்ட் வீரராக மட்டுமே விளையாட உள்ளாரா?’, ‘விக்கெட் கீப்பராக செயல்படுவாரா?’ என பல கேள்வி எழுகின்றன. சிலர் இது விளம்பர புரோமோவாக கூட இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். என்ன நடக்கிறது என்பது அடுத்து வரும் நாட்களில் தெரிந்து விடும்.
இதற்கு முன்னர் கடந்த 2022-ல் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகினார். ஜடேஜா அணியை வழிநடத்திய நிலையில் மீண்டும் தோனியே கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் சென்னை அணியின் அடுத்த கேப்டன் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.