பெங்களூரு: நடப்பு மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 11-வது லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணியை 23 ரன்களில் வீழ்த்தி உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனா, 50 பந்துகளில் 80 ரன்கள் குவித்திருந்தார்.
பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற யுபி அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வரிசையில் களம் கண்ட வீராங்கனைகள் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர்.
தொடக்க வீராங்கனைகளாக மேக்னா மற்றும் ஸ்மிருதி மந்தனா பேட் செய்தனர். 51 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மேக்னா, 21 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் எல்லிஸ் பெர்ரி உடன் 96 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஸ்மிருதி. 50 பந்துகளில் 80 ரன்கள் குவித்த நிலையில் ஸ்மிருதி ஆட்டமிழந்தார். 10 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் இதில் அடங்கும். 4 சிக்ஸர்களை பறக்கவிட்ட எல்லிஸ் பெர்ரி, 37 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 10 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தா ரிச்சா கோஷ்.
199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை யுபி அணி விரட்டியது. அலிசா ஹீலி அபாரமாக ஆடி அரைசதம் பதிவு செய்தார். தீப்தி மற்றும் பூனம் 30+ ரன்களை கடந்து ஆறுதல் தந்தனர். 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது யுபி. இதன் மூலம் 23 ரன்களில் ஆர்சிபி வெற்றி பெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி, அடுத்த இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவிய நிலையில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றுள்ளது.