சென்னை: ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘காடுவெட்டி’. சங்கீர்த்தனா, விஷ்மியா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மற்றும் சுப்ரமணிய சிவா,ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, சுப்பிரமணியன் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை சோலை ஆறுமுகம் இயக்கியுள்ளார்.
மஞ்சள் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் சார்பில் த.சுபாஷ் சந்திரபோஸ், கே.மகேந்திரன், என்.மகேந்திரன், சி.பரமசிவம், ஜி. ராமு, சோலை ஆறுமுகம் இணைந்து தயாரித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்துள்ளார். வணக்கம் தமிழா சாதிக் பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார். மா.புகழேந்தி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படம் பற்றி சோலை அறுமுகம் கூறியதாவது:
இந்தப் படத்துக்குத் தணிக்கைக் குழு 31 ‘கட்’டுகள் கொடுத்தது. ‘காடுவெட்டி’ என்ற தலைப்பை வைக்கக்கூடாது என்று சொன்ன சென்சார் போர்டிடம் எனது விளக்கத்தைக் கொடுத்தேன். காடுவெட்டி என்ற பெயருக்குப் பெரிய வரலாறு இருக்கிறது. அந்த காலத்தில் மன்னர்கள் போர் பயிற்சிக்காகக் காட்டில் ஓரு இடத்தை தேர்வு செய்து மரங்களை வெட்டி பயிற்சிக் களமாகபயன்படுத்துவார்கள். அதை போர்க்குடி மக்கள் விவசாய நிலமாக மாற்றுவார்கள். பிறகு அதைஊர்களாக மாற்றுவார்கள். அப்போதுஅதற்கு காடுவெட்டி என்று பெயர் வைப்பார்கள்.
இப்படி தமிழ்நாட்டில் 11 இடங்கள் உள்ளன. ஆக காடுவெட்டி ஒரு சரித்திரம் என்றுவிவாதித்தேன்; இந்த தலைப்பு கிடைத்தது. காதல் என்ற காரணத்துக்காக எல்லோரையும் ஒழிக்க நினைத்தால் அது தலைமுறை தலைமுறையாக வன்முறையை சேர்க்கும்.இந்தப்படம் வட மாவட்ட மக்களின் வாழ்வியலை, அரசியலை உள்ளது உள்ளபடி பேசும்.இவ்வாறு அவர் கூறினார்.