உலக அளவில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை சில நிமிடங்கள் முடக்கம்!

சென்னை: இந்தியா உட்பட உலக அளவில் மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதள சேவை முடங்கின. இதனால் பயனர்கள் சம்பந்தப்பட்ட தளங்களின் சேவையை பயன்படுத்த முடியாமல் அவதி அடைந்தனர். இதனை மெட்டா நிறுவனம் உறுதி செய்துள்ளது.

முக்கிய தளங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் முடங்கும் நேரங்களில் அது குறித்த தகவலை நிகழ்நேரத்தில் தெரிவிக்கும் டவுன் டிட்டெக்டர் தளத்தில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்கள் முடங்கியது குறித்து பயனர்கள் தெரிவித்திருந்தனர். அதில் தங்களால் லாக்-இன் செய்ய முடியவில்லை (65%), செயலியை பயன்படுத்த முடியவில்லை (27%) மற்றும் வலைதள பக்கத்தில் பயன்படுத்த முடியவில்லை (7%) என ஃபேஸ்புக் தள முடக்கம் குறித்து தெரிவித்தனர்.

ஃபேஸ்புக் தளத்தில் லாக்-இன் செய்திருந்த பயனர்கள் தானாகவே அதிலிருந்து லாக்-அவுட் செய்யப்பட்டனர். பலமுறை முயன்றும், உரிய பாஸ்வேர்ட் கொடுத்தும் தங்களால் லாக்-இன் செய்ய முடியவில்லை என பயனர்கள் தெரிவித்தனர். இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை (மார்ச் 5), இரவு 9 மணி முதல் இந்த சிக்கலை பயனர்கள் எதிர்கொண்டனர். இன்ஸ்டாகிராம் தளத்தில் ஃபீட்களை ரெஃப்ரெஷ் செய்ய முடியாமல் தவித்தனர். இந்த சூழலில் முடங்கிய ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டா தளங்கள் வழக்கம்போல தற்போது இயங்க தொடங்கி உள்ளதாகவும் பயனர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். மொத்தமாக சுமார் 40 நிமிடங்கள் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டா தளங்கள் முடங்கியதாக தகவல்.

மெட்டாவின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டா தள சர்வர்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப பின்னடைவுதான் இதற்கு காரணம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ‘பயனர்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல் குறித்து நாங்கள் அறிவோம். விரைந்து இதற்கு தீர்வு காணப்படும்’ என மெட்டா செய்தித் தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன் தெரிவித்திருந்தார். இதனை மற்ற சமூக வலைதள நிறுவனங்கள் தங்களுக்கு ஆதாயமாக பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியையும் மேற்கொண்டன.