தரம்சாலா: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய கேப்டன் ரோகித் சர்மா, இத்தொடரில் இரண்டு சதம் விளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டம் குறித்த கருத்து தெரிவித்த இங்கிலாந்து தொடக்க வீரர் பென் டக்கெட்டுக்கு பதிலடி கொடுத்தார்.
இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடுத்தடுத்து 2 அதிரடி இரட்டைச் சதங்களை இங்கிலாந்துக்கு எதிராக விளாசித் தள்ளியது. குறிப்பாக அவர் ஆடிய அதிரடி முறை பல பாராட்டுகளை ஈர்த்தது. அதேநேரம், இங்கிலாந்து தொடக்க வீரர் பென் டக்கெட், “எதிரணியிலிருந்து வீரர்கள் இப்படி ஆக்ரோஷமாக ஆடுவதைப் பார்க்கும் போது நாம் கொஞ்சம் அதற்கான பெருமையை எடுத்துக் கொள்ளலாம் என்று உணர்வு ஏற்படுகிறது.
அதாவது மற்றவர்கள் டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் விதத்திற்கும் நாம் ஆடும் விதத்திற்குமான வித்தியாசத்திற்கான பெருமை நம்முடையது என்ற உணர்வு ஏற்படுகிறது” என்று கூறினார்.
பென் டக்கெட்டின் இந்தக் கருத்துக்கு முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் கடுமையான எதிர்வினை ஆற்றினார். நாசர் ஹுசைன், “ஜெய்ஸ்வால் ஒன்றும் உங்களிடமிருந்து ஆக்ரோஷமாக ஆடக் கற்றுக் கொள்ளவில்லை. அவர் வளர்ப்பே அப்படியானதுதான். அவர் வளர்ச்சியின் பாதையில் எதிர்கொண்ட கடினப்பாடுகளினால் வளர்ந்த ஆக்ரோஷம் ஆகும் அது.
அவரிடமிருந்து மற்றவர்கள் எதையாவது கற்றுக்கொள்ள விரும்பினால் அது இதைத்தான். கொஞ்சம் சுயபரிசோதனை நடந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இல்லையெனில் இந்த ‘பாஸ்பால்’ ஒரு வழிபாடாகவே மாறிவிடும் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிடம் பென் டக்கெட் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரோகித் சர்மா, “எங்கள் அணியில் ரிஷப் பந்த் என்று ஒருவர் இருந்தார். ஒருவேளை பென் டக்கெட் அவர் விளையாடுவதைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அதனால் அப்படி ஒரு கருத்து தெரிவித்துள்ளார்” என்று கூறினார்.