தரம்சாலா: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் இன்று தொடங்குகிறது. இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இதன் பின்னர் விசாகப்பட்டினம், ராஜ்கோட், ராஞ்சி போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 3-1 என தன்வசப்படுத்தியது. இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் தரம்சாலாவில் உள்ள இமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றியை வசப்படுத்தும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளலாம்.
இந்த போட்டி இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ ஆகியோருக்கு 100-வது சர்வதேச டெஸ்ட் போட்டியாகும். இதனால் இவர்களிடம் இருந்து உயர்மட்ட செயல் திறன் வெளிப்படக்கூடும். இந்திய அணியில் ஜஸ்பிரீத் பும்ரா மீண்டும் இணைந்துள்ளது வேகப்பந்து வீச்சு துறைக்கு பலம் சேர்க்கும். அவருடன் 2-வது வேகப்பந்து வீச்சாளராக முகமது சிராஜ் அல்லது ஆகாஷ் தீப் இடம்பெறக்கூடும்.
சுழற்பந்து வீச்சில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பு இல்லை. அஸ்வினுடன் ஜடேஜா, குல்தீப் யாதவ் இடம் பெறுவார்கள். பேட்டிங்கை பொறுத்தவரையில் ரஜத் பட்டிதருக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் இடம் பெற வாய்ப்பு உள்ளது. ஏனெனில் ரஜத்பட்டிதர் 6 இன்னிங்ஸில் கூட்டாக 63 ரன்களையே சேர்த்துள்ளார். ஒருவேளை இந்தபோட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டாலும் அணியில் தனது இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமானால் உயர்மட்ட திறனை வெளிப்படுத்தியாக வேண்டும்.
ராஜ்கோட் போட்டியில் அறிமுக வீரராக அனைவரது கவனத்தையும் ஈர்த்த சர்பராஸ் கான், ராஞ்சி போட்டியில் ஏமாற்றம் அளித்தார். தரம்சாலாவில் அவர், மீண்டும் மட்டையை சுழற்றுவதில் கவனம் செலுத்தக்கூடும். டாப் ஆர்டரில் 655 ரன்கள் வேட்டையாடி உள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால், 297 ரன்கள் சேர்த்துள்ள ரோஹித் சர்மா, 342 ரன்கள் சேர்த்துள்ள ஷுப்மன் கில் ஆகியோர் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர்.
ராஞ்சி போட்டியில் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜூரெலிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி ‘பாஸ்பால்’ அணுகுமுறையால் தொடரை வெற்றியுடன் தொடங்கியது. ஆனால் அதே அணுகுமுறையால் அடுத்து நடைபெற்ற 3 ஆட்டங்களிலும் தோல்வி அடைந்து தொடரை இழந்தது. எனினும் தரம்சாலாவில் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்வதில் இங்கிலாந்து அணி ஆர்வம் காட்டக்கூடும்.
இந்த போட்டிக்கான விளையாடும் 11 பேர் கொண்ட பட்டியலை இங்கிலாந்து அணி நிர்வாகம் நேற்றே அறிவித்தது. இதில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆட்டத்தில் விளையாடிய ஆலி ராபின்சன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மார்க் வுட் சேர்க்கப்பட்டுள்ளார். பசுமையான மைதானம் மற்றும் தரம்சாலாவில் நிலவும் குளிர்ந்த வானிலை ஆகியவற்றால் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கருதப்படும் நிலையில் இங்கிலாந்து 2 பிரதான சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க முடிவு செய்துள்ளது.
இந்த வகையில் சுழற்பந்து வீச்சாளர்களாக டாம் ஹார்ட்லி, ஷோயிப் பஷிர் ஆகியோர் விளையாடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து லெவன்: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஸாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி, ஷோயிப் பஷிர், மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
சாதகமான வானிலை: தரம்சாலா ஆடுகளம் மற்றும் அங்கு நிலவும் குளிர்ந்த வானிலை இங்கிலாந்து வீரர்களை அவர்களது சொந்த மண்ணில் இருப்பது போல் உணர வைப்பதாக உள்ளது. போட்டியின் முதல் இரு நாட்கள் இங்கு வெப்பநிலை அதிகபட்சமாக 10 டிகிரி இருக்கும் என கூறப்படுகிறது. தரம்சாலா போட்டியை காண்பதற்காக அதிக அளவிலான இங்கிலாந்து ரசிகர்கள் வருகைதந்துள்ளனர்.
ஆடுகளம் எப்படி? – தரம்சாலாவில் உள்ள இமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் இதுவரை ஒரே ஒரு சர்வதேச டெஸ்ட் போட்டி மட்டுமே நடைபெற்றுள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களே அதிகம் ஆதிக்கம் செலுத்தியிருந்தனர்.
இம்முறை ஈரப்பதம் அதிகம் காணப்படுவதால் ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் வேகப்பந்து வீச்சாளர்கள் சவால்தரக்கூடும். சமீபத்தில் தரம்சாலாவில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை போட்டிகளில் பலமுறை 300-க்கும் அதிகமான ரன்கள் சேர்க்கப்பட்டிருந்தன. அதிகபட்சமாக பரோடா அணி 482 ரன்கள் குவித்திருந்தது.
நேரம்: காலை 9.30, நேரலை: ஸ்போர்ட்ஸ் 18