தரம்சாலா டெஸ்ட் | ரோகித், ஷுப்மன் கில் அடுத்தடுத்து சதம் விளாசல்: வலுவான நிலையில் இந்தியா

தரம்சாலா: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தியுள்ளார். நடப்பு தொடரில் ரோகித்தின் இரண்டாவது சதம் இது. இந்திய அணி தரப்பில் ஷுப்மன் கில்லும் இன்றைய போட்டியில் சதம் அடித்து அசத்தினார்.

தரம்சாலாவில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் குல்தீப் யாதவ், அஸ்வின் ஆகியோரது அபாரமான பந்து வீச்சில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி 57.4 ஓவர்களை மட்டும் சந்தித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸாக் கிராவ்லி 108 பந்துகளில், ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5, அஸ்வின் 4, ஜடேஜா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 30 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் குவித்தது.

தனது 4-வது அரை சதத்தை விளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் விளாசிய நிலையில் ஷோயிப் பஷிர் பந்தில் ஸ்டெம்பிங் ஆனார். தனது 18-வது அரை சதத்தை விளாசிய ரோகித் சர்மா 83 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 52 ரன்களும், ஷுப்மன் கில் 39 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 26 ரன்களும் சேர்த்த நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டி ரன்கள் சேர்ப்பதில் ஆர்வம் காட்டிய அதேவேளையில் விக்கெட் விழாமல் இருவரும் நிதானம் காட்டினார். விரைவாக அரைசதம் கடந்த ஷுப்மன் கில், மறுபக்கம் சதத்தை நெருங்கி கொண்டிருந்த ரோகித்தை முந்தும் முனைப்பில் இருந்தார்.

எனினும், அவருக்கு முன்னதாக 154 பந்துகளை சந்தித்த கேப்டன் ரோகித் சர்மா 13 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் உடன் நடப்பு தொடரில் இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். அதேநேரம், டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித்துக்கு இது 12வது சதம் ஆகும். சில நொடிகளில் ஷுப்மன் கில்லும் சதம் பதிவு செய்து அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷுப்மனுக்கு இது நான்காவது சதம் ஆகும்.

தற்போதைய நிலையில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியை விட 46 ரன்கள் முன்னிலை பெற்று விளையாடி வருகிறது .