தாயை மீட்டுக் கொண்டு வரச் செல்லும் மகன்களின் பயணத்தில் கிளறிவிடப்படும் நினைவுகளும், விரிசலிட்டுக் கிடக்கும் உறவுகளின் மீள்சேர்க்கையும் தான் ‘J.பேபி’.
மன உளைச்சலுக்கு ஆளாகும் பேபி (ஊர்வசி) தொலைந்து போகிறார். அவரின் இன்மையைக் கூட அறியாத மகன்கள் சங்கர் (தினேஷ்), செந்தில் (மாறன்) அவரவர் வேலையில் பிஸியாக இருக்கின்றனர். காவல் துறை அழைத்துச் சொல்லும்போதுதான் தாய் தொலைந்துபோனதே இருவருக்கும் தெரியவருகிறது. உடனே புறப்பட்டு தாயை மீட்டுக் கொண்டுவர, மேற்கு வங்கம் நோக்கிச் செல்லும் அவர்களுக்கு அங்கிருக்கும் தமிழர் ஒருவர் உதவுகிறார். குடும்ப பிரச்சினையால் பேசிக்கொள்ளாமல் இருக்கும் சங்கரையும், செந்திலையும் இந்தப் பயணம் என்னவாக மாற்றியது? தாய் பேபி மீட்கப்பட்டரா, இல்லையா என்பது படத்தின் திரைக்கதை.
பெருநகரத்தின் அவசர அவசரமான வாழ்வியலில் பிழைப்பை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் எளிய மக்களிடையே நிகழும் முரண்களையும், விலகிக் கிடக்கும் உறவுகளையும், மனஅழுத்தத்தின் ஆபத்தையும், அன்பின் தேவையையும் எளிய கதையின் வழியே சொல்ல முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி. அதற்கு நிஜ சம்பவத்தை கையிலெடுத்து திரைக்கதையாக்கி இருப்பது இன்னும் நெருக்கத்தைக் கூட்டுகிறது.
ஏற்ற, இறக்கங்களில்லாமல் நிதானமாக தொடங்குகிறது கதை. வடமாநில ரயில் பயணம், மோசமான உணவு, அலைக்கழிப்பு, அண்ணன் – தம்பி இடையிலான முரண் என சீரியஸாக செல்லும் இடங்களை தனது ஒன்லைன் மூலம் சிரிக்க வைக்கிறார் மாறன். முதல் பாதியில் தினேஷுக்கும், மாறனுக்கும் இடமளித்து ஊர்வசி பெயரளவிலேயே வந்து செல்கிறார். இன்ட்ரோ பாடலுடன் இரண்டாம் பாதியில் அவரின் என்ட்ரியும், அடுத்தடுத்து அவர் செய்யும் சம்பவங்களும் படத்தின் போக்கை மாற்றி கலகலப்பாக்குகிறது.
கோபித்துக்கொண்டு சென்று மீண்டும் மகனிடம் வந்து ‘பசிக்குதுப்பா’ என சொல்லுமிடத்திலும், ‘நான் உங்களுக்கு பாரமா போயிட்டேனா?’ என கண்ணீரை முழுங்கி பேசும் இடத்திலும் நம்மையறியாமலே கலங்கடித்துவிடுகிறார். திரையில் மாறனும், தினேஷும் இருந்தபோதிலும், ஒரே ஆளாக மொத்தக் கதைக்கும் வலு சேர்க்கிறார் ஊர்வசி. காவல் துறையினர், நீதிபதி யாராக இருந்தாலும் அதட்டிப் பேசுவதும், எகிறுவது, கோபம் கொள்வது, மகன்களிடம் உருகுவது, அன்பை வெளிப்படுத்தும் காட்சிகள் என கதாபாத்திரம் கோரும் வெகுளித்தனத்துக்கு அப்படியே ஒப்புக்கொடுக்கிறார்.
உப்பிய கன்னமும், தொப்பையுமாக சராசரி நடுத்தர வயது ஆணாக தினேஷ் பாவமான முகத்துடனும், ‘ஷார்ட் டெம்பர்’ குணத்துடனும் கவனம் பெறுகிறார். ஒன்லைன் காமெடிகளுக்கும், அடுத்தவரை கலாய்ப்பதற்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்ட மாறனுக்கு இப்படத்தில் அழுத்தமான கதாபாத்திரம். குடித்துவிட்டு உளறுவது, போகிற போக்கில் செய்யும் நகைச்சுவை, தம்பியிடம் காட்டும் கடுகடுப்பு, இறுதியில் உடைந்து பேசும் இடங்களில் ஈர்க்கிறார்.
உண்மைச் சம்பவத்தில் உதவிய அதே நபரை திரையில் காட்சிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. துணைக் கதாபாத்திரங்கள் தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆங்காங்கே வரும் சில மெலோ டிராமா தன்மை, அட்வைஸ் சொல்லும் இடம், சில தேவையற்ற நீண்ட வசனங்கள், உடனே மனம் மாறும் காட்சிகள் அயற்சி. தாய்க்கும் – மகனுக்குமான பிணைப்பை சொல்லாமல் முதல் பாதியில் எமோஷனலை கொண்டு வந்ததால் அதனுடன் ஒட்டமுடியவில்லை.
கூடவே சில இடங்களில் காட்சியிலிருந்து விலகும் பின்னணி இசை சீரியல் தன்மை. ஆனால், சித்ரா குரலில் வரும் ‘யார் பாடலை’ பாடல் மூலம் உருக வைக்கிறார் இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ.
இயல்பான களத்தை இன்னும் நெருக்கமாக்குகிறது ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவு. உணர்வுபூர்வமான படத்தை எதிர்நோக்கும் பார்வையாளர்களுக்கு இப்படம் நல்ல தேர்வாக அமையலாம்.