சென்னை: தமன்னா நடிக்கும் ‘ஒடேலா 2’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆன்மிக பயணம் செல்லும் வகையிலான தோற்றம் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு அசோக் தேஜா இயக்கத்தில் வெளியான தெலுங்கு படம் ‘ஒடேலா ரயில்வே ஸ்டேஷன்’ (Odela Railway Station). தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. முதல் பாகத்தை இயக்கிய அசோக் தேஜா இந்தப் படத்தையும் இயக்குகிறார்.
ஹெபா படேல், வசிஷ்ட என் சிம்ஹா,நாக மகேஷ், வம்சி, ஆகியோர் நடிக்கின்றனர். ‘காந்தாரா’ புகழ் அஜனேஷ் லோக்நாத் படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் தமன்னா நடிக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் முதல் தோற்றத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகை தமன்னா, “மகா சிவராத்திரியான இந்த புனித நாளில் முதல் தோற்றத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என தெரிவித்துள்ளார்.
முதல் தோற்றத்தை பொறுத்தவரை காவி உடை, கையில் உடுக்கையுடன் பக்தி நிரம்பிய முகத்துடன் ஆன்மிக பயணத்தை தமன்னா மேற்கொள்வது போல போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர் இருக்கும் பகுதி காசியாக இருக்கலாம் என தெரிகிறது. மேலும் தமன்னா தீவிர சிவன் பக்தராக நடித்திருப்பதும், படம் ஆன்மிக பயணத்தை அடிப்படையாக கொண்டதையும் போஸ்டர் உறுதி செய்துள்ளது.