திரை விமர்சனம்: J.பேபி

சென்னையின் பின்தங்கிய பகுதியொன்றில் வசிக்கும் அண்ணன் செந்திலும் (மாறன்) தம்பி சங்கரும் (தினேஷ்) பேசிக் கொள்வதை நிறுத்திவிட்டவர்கள். காணாமல் போன தங்கள் அம்மா ஜே.பேபியை (ஊர்வசி) அழைத்து வர, இருவரும் கொல்கத்தா செல்கிறார்கள். அவர்கள் எதனால், பேசிக் கொள்வதில்லை, ஜே.பேபி, கொல்கத்தா போனது ஏன், சகோதரர்களின் பயணம் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தது என்ன என்பது கதை.

அண்ணனும் தம்பியும் ஏன் பேச்சை நிறுத்திக்கொண்டார்கள் என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வத்தை உருவாக்கும் தொடக்கக் காட்சியிலிருந்தே படத்துடன் ஒன்ற வைக்கிறது திரைக்கதை. சகோதரர்கள் கொல்கத்தா செல்லும் வழியில் சங்கரின் நினைவுகளிலிருந்தும், அங்கு சென்ற பின், அவர்களுக்கு உதவும் கொல்கத்தா தமிழர் மூர்த்தி கேட்கும் கேள்விக்குப் பதிலாக விரியும் பேபியின் வாழ்க்கைநிகழ்வுகளிலிருந்தும் பிரச்சினைகளுக்கான காரணங்கள் வெளிப்படும்போது, படத்தின் நீளத்தை மறந்து ஒன்றிவிட முடிகிறது.

உண்மையாக வாழ்ந்து மறைந்த பெண்ணின் வாழ்க்கைக் கதையைப் படமாக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி, அக்கதையை காட்சிகளாக்கிய விதமும் பேபி, அவருடைய 5 பிள்ளைகள், கொல்கத்தா மூர்த்தி ஆகிய கதாபாத்திரங்களை எழுதிய விதமும் எளிய மக்களின் வாழ்க்கையாக இருக்கின்றன. குறிப்பாக, நிஜ வாழ்க்கையில், ஜே.பேபியின் மகன்களுக்கு கொல்கத்தாவில் தன் வேலையை விட்டுவிட்டு உதவிய மூர்த்தி என்கிற ராணுவ ஊழியரை, அதே பெயருடன் அவரையே நடிப்பு என தெரியாதபடி நடிக்க வைத்திருப்பது வியத்தகு முயற்சி.

ஜே.பேபியாக நடித்துள்ள ஊர்வசி படத்தைத் தன் தோளில் தூக்கிச் சுமந்திருக்கிறார். அதேநேரம், அவரது மகன் செந்திலாக நடித்துள்ள மாறன், மற்றொரு சங்கராக நடித்துள்ள ’அட்டக்கத்தி தினேஷ்’ ஆகியோர் வாழ்ந்திருக்கிறார்கள். குறிப்பாக, செந்தில் கதாபாத்திரத்தின் மதுப்பழக்கம் குடிநோயாக இருப்பதையும் அதன் அனத்தல்களையும் மாறன் நடிப்பில் கொண்டு வந்திருக்கும் நேர்த்தியில் அவ்வளவு நம்பகம். அவரது வசன நகைச்சுவைகள் எடுபடும் அதே நேரம், தம்பி மீதான கோபத்தின் இறுக்கத்தை அவர் முகபாவங்களிலும் உடல்மொழியிலும் காட்டும் விதம் அபாரம். இதுவரை தினேஷ் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரங்களில் இதில் தனது சிறந்த வெளிப்பாட்டைக் கொடுத்திருக்கிறார்.

வாழ்கை தந்துசெல்லும் வலிகளுக்கு நடுவில் தெறிக்கும் நகைச்சுவையை, ஓர் அபலைப் பெண்ணாகஎடுத்தாளும்போதும் சரி, தனது பிள்ளைகளைத் திட்டுபவர் நீதிபதியாகவே இருந்தாலும் சண்டைக்குப் போவதிலாகட்டும், ‘நான் இருக்கிற வரைக்குமாவது ஒத்துமையா இருங்கப்பா’ என பிள்ளைகளிடம் எதிர்பார்க்கும் போதும், வயதுக்கேற்ற வாழ்நாள் கதாபாத்திரங்களில் ஒன்றான அதைப் பிரிந்து மேய்ந்திருக்கிறார் ஊர்வசி.

திரைக்கதையின் விரல்பிடித்துச் சென்றிருக்கிறது ஜெயந்த் சேதுமாதவனின் ஒளிப்பதிவு. கதையின் மையக் கரு, கதாபாத்திரங்களின் உணர்வு நிலை ஆகியவற்றை ‘நெடுமரம் தொலைந்ததே’, ‘யார் பாடலை’ ஆகிய சிறந்த மென்னுணர்வுப் பாடல்களின் வழி கதைக்கான இசையைக் கொடுத்திருக்கும் டேனி ஜோசப்புக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது.

5 பிள்ளைகளைப் பெற்று, அவர்களை அரும்பாடுபட்டு ஆளாக்கி முடித்த வேளையில் கணவரின் இழப்பைச் சந்திக்கும் ஒரு பெண், அவரது இரண்டாம் பாதி வாழ்க்கையில் வீசும் மனப் புயல், அதில் சிக்கும் அவளுடைய பிள்ளைகளின் அலைக்கழிதல் என நகரும் இப்படம், தமிழ் சினிமாவின் அபூர்வங்களில் ஒன்று.

'+divToPrint.innerHTML+'