பேர்ஸ்டோ – கில் என்ன பேசிக்கொண்டனர்? – வைரலாகும் சுவாரஸ்யம்!

தரம்சாலா டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தன் 2வது இன்னிங்சில் மட்டையாளர்களுக்குச் சாதகமானப் பிட்சில் 50 ஓவர்கள் கூட தாங்காமல் 195 ரன்களுக்குச் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வி அடைந்து தொடரை 1-4 என்று இழந்தமை அந்த அணியுடன் இனி 5 டெஸ்ட் போட்டிகள் தாங்குமா என்ற கேள்வியை எழுப்பியிருந்தோம். இங்கிலாந்து தோல்வியடையும் முன்னரே இதைக் குறிப்பிட்டோம். இந்நிலையில் இங்கிலாந்து வீரர்களின் வாய்க்கொழுப்புக்குச் சான்றாக தரம்சாலாவில் 3ம் நாள் ஆட்டத்தில் ஷுப்மன் கில் மற்றும் ஜானி பேர்ஸ்டோ இடையே வாக்குவாதம் ஒன்று நடந்தது.

இந்திய அணியினர் ஒரு காலத்தில் வாய் பேசாமல் வாளாவிருந்துள்ளனர், ஆனால் கங்குலி, கும்ப்ளே, விராட் கோலி இப்போது ரோஹித் சர்மா காலக்கட்டங்களில் எதிரணியினரின் வாய்க்கொழுப்புக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். ஜெய்ஸ்வால் அதிரடி இரட்டைச் சதத்தையும் கில் அதிரடி சதத்தையும் எடுக்க சர்பராஸ் கான் இங்கிலாந்து பவுலர்களுடன் வீடியோ கேம் போல் விளையாட பொறுக்கமாட்டாமல் பென் டக்கெட் ‘தங்கள் பாணியை எதிரணி வீரர்கள் கடைப்பிடிப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று கூறி தூண்டி விட்டார். உடனே அவருக்கு அனைவரும் பதிலடி கொடுத்தனர்.

அவர்களின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைனும், மைக்கேல் வானும் பென் டக்கெட்டுக்கு எதார்த்தமென்னவென்பதை உணர்த்தினர். இங்கிலாந்து மீடியாக்களும் பாஸ்பால் என்று ஏதேதோ உளறிக்கொட்டி கடைசியில் வாங்கிக் கட்டிக் கொண்டனர். ஆனால் இங்கிலாந்து அணியின் வாய்க்கொழுப்பு சிறந்ததா இந்திய அணியினரின் வாய்க்கொழுப்பு சிறந்ததா என்பதை சோதிக்கும் ஒரு உரையாடல் நேற்று பேர்ஸ்டோவுக்கும், ஷுப்மன் கில்லுக்கும் இடையே நடந்தது. அவர்கள் என்ன பேசிக்கொண்டனர் என்பதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஜானி பேர்ஸ்டோ களமிறங்கும் போது ஷுப்மன் கில்லிடம் ‘நீ ஜிம்மி ஆண்டர்சனிடம் என்ன கூறினாய்?’என்று கேட்டார். அதாவது ஷுப்மன் கில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் சதமெடுத்த போது ஆண்டர்சனும் கில்லும் சில வார்த்தைகளைப் பரிமாறிக்கொண்டனர்.

அதைத்தான் பேர்ஸ்டோ இறங்கும் போது கில்லிடம் வினவ, கில், “ஆம்! ஜேம்ஸ் ஆண்டர்சன் ரிட்டையர் ஆக வேண்டும் என்றேன்” என்றார். உடனே பேர்ஸ்டோ, ‘அடுத்த பந்திலேயே உன்னை ஆண்டர்சன் வீழ்த்தினாரில்லியா?’ என்று கூறினார். அதற்கு ஷுப்மன் கில், “அதுக்கு இப்ப என்ன?’ நான் சதமெடுத்த பிறகு அவர் என்னை அவுட் ஆக்க முடியும்” என்றார். அதற்குப் பேர்ஸ்டோ, “100% சரி” என்றார்.

கில் பேர்ஸ்டோவிடம்: இந்தத் தொடரில் நீ எத்தனை சதங்கள் எடுத்தாய்?” என்று கேட்டார். உடனே பேர்ஸ்டோ, ‘நீ எத்தனை சதம் எடுத்து விட்டாய்? ஃபுல் ஸ்டாப்’ என்றார். இந்த சுவாரஸ்ய ஸ்லெட்ஜின் வாக்குவாதம் வைரலாகி வருகிறது.