ராமேசுவரத்தில் மாசி அமாவாசையையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

ராமேசுவரம்: மாசி அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா மார்ச் 1-ம் தேதி தொடங்கியது. திருவிழாவின் 10-வது நாளான நேற்று அதிகாலை ராமநாத சுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை, கால பூஜைகள் நடந்தன. காலை 9 மணிக்கு மேல் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் இந்திர விமானத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்தனர்.

மாசி அமாவாசையையொட்டி தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் வந்து, அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து, சுவாமி தரிசனம் செய்தனர்.

பிற்பகல் 1.30 மணியளவில் ராமநாத சுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் அக்னி தீர்த்தக் கடலில் எழுந்தருளினர். பின்னர்,வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க தீர்த்தவாரி நடைபெற்றது. மாலை 6 மணியளவில் அக்னி தீர்த்த மண்டபத்தில் ஒளி வழிபாடு முடிந்து, சுவாமி, அம்பாள் தங்கரிஷப வாகனங்களில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங் கேற்றனர்.