சோனேபட் (ஹரியாணா): ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான போட்டியில் இந்திய மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் பூனியா, ரவி தாஹியா ஆகியோர் தோல்வி அடைந்தனர்.
இந்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டி ஹரியாணாவின் சோனேபட் நகரில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஃப்ரீஸ்டைல் 65 கிலோ பிரிவு அரை இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் பஜ்ரங் பூனியா, ரோஹித் குமார் ஆகியோர் மோதினர். இதில் ரோஹித் குமார் 9-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றார்.
தோல்வி அடைந்த பஜ்ரங் பூனியா, பாரிஸ் ஒலிம்பிக் தகுதிச் சுற்றிலிருந்து வெளியேறியுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறுவதற்காக பஜ்ரங் பூனியா, ரஷ்யாவுக்கு சென்று பயிற்சி பெற்று திரும்பியிருந்தார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மேற்பார்வையாளர் குழு ஏற்பாடு செய்திருந்த பயிற்சி முகாமில் அவர் கலந்துகொண்டிருந்தார். இருப்பினும் அவர் தகுதிச் சுற்றில் தோல்வி அடைந்துள்ளார்.
தகுதிச் சுற்றில் தோல்வி அடைந்தவுடன் அவர், சோனேபட்டிலுள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) மைய வளாகத்திலிருந்து உடனடியாக வெளியேறினார். அப்போது அவரிடம் ஊக்கமருந்து சோதனை நடத்துவதற்கான மாதிரிகளை (சாம்பிள்) பெற தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணைய (என்ஏடிஏ) அதிகாரிகள் முயன்றனர். ஆனால் அவர் அதற்குள்ளாக மையத்திலிருந்து வெளியேறிவிட்டார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆடவர் 57 கிலோ பிரிவு போட்டியில் இந்திய வீரர்கள் ரவி தாஹியாவும், அமன் ஷெராவத்தும் மோதினர். இதில் அமன் ஷெராவத் 14-13 என்ற கணக்கில் ரவி தாஹியாவை வென்றார்.
அமன் ஷெராவத், 2023-ல் நடைபெற்ற பல்வேறு சர்வதேச போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று பதக்கங்கள் வென்றிருந்தார். ஆசிய விளை யாட்டுப் போட்டியிலும் அவர் வெண்கலம் வென்றார்.
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த தகுதிச் சுற்றுப் போட்டியில் 57 கிலோ பிரிவில் அமன் ஷெராவத்தும், ஆடவர் ஃப்ரீஸ்டைல் 65 கிலோ பிரிவில் ரோஹித் குமாரும் இந்தியா சார்பில் பங்கேற்பர். மகளிர் 53 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை அன்திம் பங்கல் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.